Sultan: நூறுரெளடிகள்; ஒரே சுல்தான்;கார்த்தியின் ஸ்கெட்ச் சுல்தான் 2 வருட நிறைவு!
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, இது திப்பு சுல்தானின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து எடுக்கப்படுகிறது என்று களத்திற்கே சென்று அரசியல் கட்சிகள் சில குடைச்சல் கொடுத்தனர்
சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ படத்தை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் பாக்கியராஜ். இவரின் இரண்டாவது திரைப்படம்தான் ‘சுல்தான்’. கதையை கேட்டு கதாநாயகனாக நடிகர் கார்த்தி கமிட் ஆக தயாரிப்பாளராக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஒப்பந்தம் ஆனார்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, இது திப்பு சுல்தானின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து எடுக்கப்படுகிறது என்று,களத்திற்கே சென்று அரசியல் கட்சிகள் சில குடைச்சல் கொடுத்தனர்.
அதன் பின்னர் தயாரிப்பு நிறுவனம் முன்வந்து, இது திப்புசுல்தான் வாழ்க்கை வரலாற்று படமல்ல என அறிக்கை விட்டு விளக்கம் கொடுத்தது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 -ல் வெளியான இந்த திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கார்த்தியின் ஹிட் லிஸ்ட் பட்டியலில் இணைந்தது.
கதைச்சுருக்கம்
நெப்போலியன் மிகப்பெரிய தாதா. இவரது மனைவி அன்னலட்சுமி பிரசவத்தின் போது இறந்து விட, மகன் கார்த்தியை நெப்போலியனுடன் இருக்கும் ரெளடிகள் பாசத்தோடு வளர்க்கிறார்கள்.
கார்த்தியும் நன்றாக படித்து ரோபோட்டிக்ஸ் பொறியாளராகி மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார். இதனிடையே சம்பவம் ஒன்றில் நெப்போலியன் இறக்க நேரிட, இறக்கும் தருவாயில் அவர் காவல்துறை போட்டு இருக்கும் என்கவுண்டர் ஸ்கெட்ச்சிலிருந்து ரெளடிகளை காப்பாற்றுமாறு கார்த்தியிடம் சத்தியம் வாங்குகிறார் அந்த சத்தியம் காப்பாற்றப்பட்டதா? அதற்கு கார்த்தி கையில் எடுத்த ஆயுதம் என்ன என்பதே படத்தின் கதை!
நூறு அண்ணன்மார்களின் பாசம்
பொதுவாக படங்களில் ரெளடிகளை பார்க்கும் போது நமக்கு எரிச்சலோ அல்லது கோபமோ வரும். ஆனால் அது இந்த படத்தில் அது தலைகீழாக திரும்பி இருக்கும்.
ஆம் ரெளடிகளிடம் இருக்கும் குணநலன்களையும், உடல்மொழியையும் நமக்குள் காமெடியாக கடத்தி சுல்தானுக்கு அவர்கள் மீது இருக்கும் கரிசனத்தை நமக்குள்ளும் ஏற்றியிருப்பார் இயக்குநர் பாக்கியராஜ். அந்த நூறு ரெளடிகளின் பாசம் தான் இந்த படம் வெற்றி அடைந்ததின் ஆதாரப்புள்ளி.
சுல்தானாக வரும் கார்த்தியை தன்னுடைய மகனாக பார்க்கும் அந்த ரெளடிகள் கார்த்தி என்ன சொன்னாலும் அதுவே வேதவாக்கு என்று செய்வர். ஒரு கட்டத்தில் விவசாயமே நமக்கு வாழ்வு என்று கார்த்தி சொல்ல,அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் ரெளடிகள் செய்யும் ரகளைகள் இன்றும் நம் சிரிப்பிற்கு கேரண்டி.
கார்த்தியுடன் எப்போதுமே ஆள் உயர அனுமான் போல ஒரு கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரம் கிளைமேக்சில் செய்யும் ஒரு விஷயம் விசுவாசத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும்.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா. அவரது கதாபாத்திரம் ஒன்றுதான் படத்தில் செயற்கையாக தெரியும்.அது ராஷ்மிகாவின் தோல்வி என்று கூட சொல்லலாம். ரெளடிகளின் தலைவனாக வரும் லாலின் நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்து இருக்கும்.
படத்தின் இன்டர்வெலும் கிளைமேக்ஸூம் அதகள ரகமாய் அமைந்திருக்கும். குறிப்பாக கிளைமேக்சில் சுல்தானின் குணத்தை புரிந்து கொண்டு திரும்பவரும் ரெளடிகள், சுல்தானிடம் மண்டியிட்டு அவருக்காக சண்டையிடும் காட்சியில் உணமையில் திரையரங்கம் தெறித்தது என்றுதான் சொல்ல வேண்டாம்.
டாபிக்ஸ்