Actor Karthi: புலவர் ராசுவின் தொண்டு வரலாற்றில் நிலைத்திருக்கும் - கார்த்தி இரங்கல்
இராசு அய்யா மறைந்தாலும் அவராற்றிய மாபெரும் தொண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கல்வெட்டு அறிஞர் செ ராசு மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85. புலவர் செ. இராசுவுக்கு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து இதுதொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
"50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், முதன் முதலில் அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகுக்கு பல அரிய வரலாற்று தகவல்களை அளித்தவரும், இன்றும் பல ஆயிரம் விவசாயிகள் பயனடையும் காலிங்கராயன் வாய்க்காலின் வரலாற்றையும் அதன் அறிவியலையும் தரவுகளோடு முதன் முதலில் எழுதியவருமான வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர், தஞ்சை பல்கலைக்கழக மேனாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது.
அவருடைய இழப்பு தொல்லியல் மற்றும் வரலாற்று துறைக்கு மட்டுமன்றி வருங்கால சந்ததியினருக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். புலவர் இராசு அய்யா மறைந்தாலும் அவராற்றிய மாபெரும் தொண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அய்யா அவர்களின் மறைவுக்கு உழவன் ஃபவுண்டேஷன் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் செ. இராசு, ஈரோடும் மாவட்டம் சென்னிமலை அருகே வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு கிராமத்தில் பிறந்து, பள்ளிப்படிப்பை திருப்பூரிலும், முதுநிலை பட்டப் படிப்பை சென்னை பல்கலைகழகத்திலும் முடித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைகழக்த்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்றார். 1959இல் ஈரோட்டில் தமிழ் ஆசிரியராக பணியை தொடங்கிய செ. இராசு, 1980 முதல் 1982 வரை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.
பின்னர் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கல்வெட்டு, தொல்லியல் துறையில் தலைவராக பொறுப்பேற்றார். கல்வெட்டு, செப்பேடு, சுவடி போன்றவை பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக சென்று அவற்றை ஆய்வு செய்து செய்தியாகவும், கட்டுரையாகவும், நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசை கல்வெட்டை கண்டறிந்து உலகுக்கு வெளிபடுத்தியுள்ளார். இந்தியாவில் வெளிப்படுத்தப்பட்ட முதல் இசை கல்வெட்டாக இது அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்