தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Kamalhassan's Aayirathil Oruthi Movie Completes 49 Years Of Its Release

49 Years of Aayirathil Oruthi: 3 பெண் கதாபாத்திரங்கள்..நடுவில் முத்திரை பதித்த கமல்.. ‘ஆயிரத்தில் ஒருத்தி’ ரிலீஸான நாள்!

Karthikeyan S HT Tamil
Mar 14, 2024 05:15 AM IST

49 Years of Aayirathil Oruthi: அவினாசி மணி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருத்தி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 49 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

‘ஆயிரத்தில் ஒருத்தி’
‘ஆயிரத்தில் ஒருத்தி’

ட்ரெண்டிங் செய்திகள்

மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், அவினாசிமணி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் ஒருத்தி' திரைப்படம் இன்று நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. காரணம் என்னவெனில் இத்திரைப்படம் 1975-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி இதே நாளில் வெளியானது.

அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், கே.ஆர். விஜயா, சுஜாதா, ஸ்ரீகாந்த், கே.பாலாஜி, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஜெயசுதா, சுகுமாரி, அசோகன், மனோரமா என மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தனர். கே.ஆர்.விஜயா, சுஜாதா, ஜெயசுதா என்று மூன்று பெண் கதாபாத்திரங்களை வலுவாக படைத்து அதைச்சுற்றி கதையை அமைத்திருப்பார் இயக்குனர் அவினாசி மணி. படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடித்தவர் கே.ஆர்.விஜயா.

சுஜாதாவின் சகோதரியாகவும், கமல்ஹாசனின் காதலியாகவும் ஜெயசுதா நடித்திருந்தார். இவரை காதலிப்பவராக கமல் நடித்திருந்தார். படத்தில் அவரது பெயரே கமல் என்றுதான் வரும். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சியை கவர்ச்சிகரமாக எடுத்திருந்தார் இயக்குனர் அவினாசி மணி. முக்கியமாக ஜெயசுதா சின்ன சார்ட்ஸ் அணிந்து கவர்ச்சியில் கலக்கியிருப்பார்.

கே.ஆர்.விஜயா யாரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தாரோ அவரது மகனான ஸ்ரீகாந்த்தான் சுஜாதாவின் காதலர். எனவே, சுஜாதாவை திருமணம் செய்ய வேண்டுமென்றால் கே.ஆர்.விஜயா குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் பிளாக்மெயில் செய்வார். இதற்கிடையில் ஜெயசுதாவை காதலித்து கர்ப்பமாக்கியிருக்கும் கமல் தான் உண்மையான குற்றவாளி என்பதை கே.ஆர்.விஜயா கண்டுபிடித்துவிடுவார். இருப்பினும் குடும்பம் சிதையாமல் இருக்க, இதனை கே.ஆர்.விஜயா மறைத்து சுஜாதா, ஜெயசுதா இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார். கடைசில் அதிரடியாக ஒரு ட்விஸ்டை வைத்து படத்தை முடித்திருப்பார்கள் இயக்குனர் மணி.

இந்தப் படத்தின் டைட்டிலில் முதலில் கே.ஆர்.விஜயாவின் பெயர் தான் வரும். அதன் பிறகு அண்ணனாக நடித்திருந்த பாலாஜியின் பெயர். அப்போது கமலைவிட ஸ்ரீகாந்த் பிரபலம் என்பதால் மூன்றாவது பெயராக ஸ்ரீகாந்த் பெயர் இடம்பெற்றிருக்கும். அதன் பிறகு நான்காவதாக தான் கமல் பெயர் வரும். இந்தப் படத்துக்கு கமலுக்கு தரப்பட்ட சம்பளம் 17,000 ரூபாய் தான். இதை வைத்துதான் 16 வயதினிலே படத்துக்கு கமலுக்கு சம்பளம் பேசியிருக்கிறார்கள் பாரதிராஜாவும், சித்ரா லட்சுமணனும். ஆனால், 30,000 ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் கமல். அதன்படியே, 16 வயதினிலே படத்துக்கு முப்பதாயிரம் சம்பளம் பெற்றார் கமல்ஹாசன். பாரதிராஜாவின் முதல் படமான பதினாறு வயதினிலே தமிழ் திரைப்படத்தின் போக்கையே மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை.

அதேபோல், 49 ஆண்டுகளுக்கு முன் வந்த நாயகி மையப்படமான ஆயிரத்தில் ஒருத்தி'யில் சில பிற்போக்குத்தனமான கருத்துகள் பல இருந்தாலும் கே.ஆர்.விஜயா, சுஜாதா, ஜெயசுதா என்று மூன்று பெண் கதாபாத்திரங்களை வலுவாக படைத்து அசத்தி இருப்பார் அவினாசி மணி. 1975-ம் ஆண்டு இதே மார்ச் 14-ம் தேதி வெளியாகிய இப்படம் தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கியது. கமலுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்த 'ஆயிருத்தில் ஒருத்தி' படம் வெளியாகி இன்றோடு 49 ஆண்டுகளை நிறைவு செய்து 50 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்