குருவாயூரில் முடிந்த திருமணம்.. ஊத்துக்குளி ஜமீன் வாரிசை கரம்பற்றினார் காளிதாஸ் ஜெயராம்.. கலந்துகொண்ட வி.ஐ.பிக்கள்
குருவாயூரில் முடிந்த திருமணம்.. ஊத்துக்குளி ஜமீன் வாரிசை கரம்பற்றினார் காளிதாஸ் ஜெயராம்.. கலந்துகொண்ட வி.ஐ.பிக்கள் குறித்து பார்க்கலாம்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியும் ஊத்துக்குளி ஜமீன் வாரிசுமான தாரிணி காளிங்கராயருக்கு திருமணம் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது.
அண்மையில் ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர், காளிதாஸ் ஜெயராம். இவர் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் ஆவார். இவரும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஊத்துக்குளி ஜமீன் வாரிசும் மாடல் அழகியுமான தாரிணியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். பின்னர், இருதரப்பு வீட்டினரின் சம்மதத்தின்பேரில் இருவரும் தங்களது காதலை கடந்தாண்டு சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இவர்களது திருமணம் இன்று கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் காளிதாஸின் பெற்றோர்களான ஜெயராம் மற்றும் பார்வதி தம்பதியினரும், மணமகள் தாரிணியின் பெற்றோர்களான தமிழ்நாட்டின் ஊத்துக்குளி ஜமீன் ஹரிஹர ராஜும், ஆரத்தியும் திருமணத்துக்கு வந்திருந்தவர்களை வரவேற்றனர்.
கலந்துகொண்ட வி.ஐ.பிக்கள்:
இந்த திருமணத்தில் நடிகர் சுரேஷ் கோபி தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். தவிர, கேரள பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தனர்.
முன்னதாக மணமகன் காளிதாஸ் ஜெயராம் ராயன், இந்தியன் 2, நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம், ஆந்தலாஜி படமான புத்தம் புதுகாலை, பாவ கதைகள், ஒரு பக்க கதை ஆகியப் படங்களில் நடித்திருந்தார்.
அதேபோல் மணமகள் தாரிணி, 2021ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடம்பிடித்தவர் மற்றும் ஊத்துக்குளி ஜமீன் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
ஊத்துக்குளி ஜமீன் ஃபேமிலியில் இருந்து மருமகள் - நெகிழ்ந்த ஜெயராம்:
முன்னதாக சென்னையை அடுத்த மதுரவாயலில் நடந்த திருமணத்துக்கு முந்தைய மணமக்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஜெயராமும் அவரது மனைவியும் தங்களது மருமகள் தாரிணி காளிங்கராயரை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர்.
அப்போது மேடையில் பேசிய நடிகர் ஜெயராமன், ''எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். குறிப்பாக, இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது தந்தை மற்றும் அவரது ஒட்டுமொத்தக் குழுவும் இங்கு வந்து எங்களுக்காக இன்னிசைக்கச்சேரி செய்துகொடுக்கிறதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷம். என்னைப் பொறுத்தவரைக்கும் என் வாழ்வில் மிக சந்தோஷமான நாள் இது என்று சொல்லிக்கலாம். காளியோட கல்யாணம் என்பது எங்களுக்கு எல்லாம் ஒரு கனவு.
இன்னைக்கு அது முழுபூர்த்தியாகுது. அதில் ரொம்ப சந்தோஷம் என்னவென்றால், சூட்டிங் எல்லாம் போகும்போது, பொள்ளாச்சி - ஊத்துக்குளி காலிங்கராயர் ஃபேமிலி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஊத்துக்குளி ஜமீன்னு பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அந்த ஊத்துக்குளி ஜமீன் ஃபேமிலியில் இருந்தே, என் வீட்டுக்கு மருமகளாக தாரு வந்ததில் கடவுள் கொடுத்த புண்ணியம். அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நன்றி ஹரி(மருமகளின் தந்தையின் கையைப் பிடிக்கிறார்). மருமகள்னு சொல்லமாட்டேன். இப்போது என்னுடைய மகள். அவங்களை கொடுத்ததற்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் குடும்பமும் பாபுலால் குடும்பமும் சென்னையில் மிக மரியாதைக்குரிய குடும்பம். எங்கள் வீட்டுக்கு நீங்கள் கொடுக்கிறது மருமகள் இல்லை. ஒரு பொண்ணு. எல்லா பேரும் எங்கள் பிள்ளைகளை வாழ்த்திட்டுப்போகணும்’’ என நெகிழ்ச்சியுடன் முடித்தார், நடிகர் ஜெயராம்.