Kadhal Sugumar: ‘நாங்க பரவாயில்ல.. நடிகைகள் பாடு தான்..’ சினிமா சில்மிஷம் பற்றி காதல் சுகுமார் ஓப்பன் டாக்!
இந்த உலகத்தில் யாருமே யோக்கியன் இல்லை, என்னையும் சேர்த்து தான். எல்லாரும் திருடன் தான், வாய்ப்பு கிடைக்கும் வரை. ‘நான் தப்பே செய்யவில்லை’ என்று ஒருவன் சொன்னால், அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
நகைச்சுவை நடிகர் காதல் சுகுமார், யூடியூப் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘நானும் சிம்புவும் நெருக்கமானவர்கள். இன்றும் நெருக்கமாக தான் இருக்கிறோம். சினிமாவில் இரண்டு விசயம் உள்ளது. ஒன்று, தன்னம்பிக்கையோடு இருந்தால் தனியாக முயற்சிக்கலாம். மற்றொன்று இன்னொருத்தவர் புகழை பயன்படுத்தி அந்த குதிரையில் சவாரி பண்ணலாம். இரண்டாவது விசயத்தை தான் பலரும் செய்கிறார்கள். அதற்கு உதாரணம் கூல் சுரேஷ்.
இன்று வடிவேலு சார் மீது விமர்சனங்கள் வருகிறது. உச்சத்தில் இருக்கும் போது ஒருவர் செய்வதை தான் வடிவேலு செய்தார். ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள் அவர்களின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுப்பார்கள். அப்படி தான் சினிமாவில் ஒருவர் உச்சத்தில் இருக்கும் போது, எல்லா நடிகரும் வடிவேலு சார் மாதிரி தான் செய்வார்கள். முதன் முதலில் வடிவேலு சார் மாதிரி மிமிக்ரி செய்தவன் நான் தான். சின்னத்திரை வடிவேலு என்றார்கள்.
அதை எப்படி உடைக்கலாம் என்று நினைத்த போது, விருமாண்டி படத்தில் நடித்த போது கமல் சார் தான் நிறைய அட்வைஸ் கொடுத்தார். ‘நீங்கள் நல்ல நடிகராக மாற நினைத்தால் இன்னொருவர் மாதிரி மிமிக்ரி கூட பண்ணக்கூடாது, அதனால் உங்கள் முகவரி அழிந்துவிடும்’ என்று.
நான் சினிமாவில் எந்த அணியிலும் இல்லாமல் தனித்து நின்றேன். நான் வடிவேலு சார் பக்கமும் இல்லை, விவேக் சார் பக்கமும் இல்லை. அதனால் நிறைய சிரமங்களை சந்தித்தேன். எந்த பக்கம் போனாலும் அவர்கள் இருவரும் தான் டாமினேஷனாக இருந்தார்கள். இருவருமே என்னை சேர்க்க மாட்டார்கள். இரண்டு மூன்று படத்திற்கு ஸ்பாட்டுக்கு போய், திரும்பி வந்திருக்கிறேன். ‘அவர் நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம்’ என்று சொல்லியே என்னை திருப்பி அனுப்பினார்கள்.
ஆறு, சச்சின், இங்கிலீஸ்காரன் போன்ற படங்களில் நடிக்க போய், திரும்ப வந்திருக்கேன். விஜய்சேதுபதியின் முதல் படமான தென்மேற்கு பருவ காற்று படத்தில் பணியாற்றிய போது, சீனுராமசாமி சார் என்னை அழைத்து விஜய் சேதுபதியை அறிமுகம் செய்து வைத்தார். என்னிடம் 20 நாள் கால்ஷீட் வாங்குனாங்க. ஒரு நாள் என்னை டீ சாப்பிட விஜய் சேதுபதி அழைத்துச் சென்றார்.
டீ ஆர்டர் பண்ணும் போது, ஒரு பேப்பரை பார்த்த விஜய் சேதுபதி, திடீரென ஷாக் ஆகி, ‘இங்கே பாருங்க.. பாருங்க..’ என பதறுகிறார். என்னவென்று பார்த்தால், ஒரு பக்கத்தில் நான்கு விளம்பரங்கள், நான்கிலும் என் போட்டோ உள்ளது. ‘என்னங்க இப்படியெல்லாம் படம் பண்றீங்க?’ என்று விஜய்சேதுபதி கேட்டார்.
‘ஏன் பண்ணா, என்ன தப்பு?’ என்று நான் கேட்டேன். ‘பெரிய பெரிய படங்களை தேர்வு செய்து நடிக்கலாமே’ என்று கூறினார். ‘ஒரு நடிகன் காலையில் எழுந்தால் ஷூட்டிங் போக வேண்டும்; இது யாருக்காவது கிடைக்குமா? அதனால் நடிக்கிறேன்’ என்று அவரிடம் கூறினேன்.
சினிமாவில் வாய்ப்புகள் எல்லாம் எளிதல்ல, நம்மை விடுங்க, நடிகைகளின் நிலைமை இருக்கிறதே… அவர்களின் பல கஷ்டங்களை சொல்லி கேட்டால் அவ்வளவு சங்கடமா இருக்கும். ஆனாலும் வேறு வழியில்லை என சிலரும், இல்லை நான் இப்படி தான் நடிப்பேன் என சிலரும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
யாரும் யாரையும் கார்னர் செய்ய மாட்டார்கள். கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஒத்துக் கொண்டால் தான் எதுவும் நடக்கும். இல்லையென்றால் விட்டு விடுவார்கள். ஏனென்றால், இங்கு சாய்ஸ் நிறைய இருக்கிறது. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் யாருமே யோக்கியன் இல்லை, என்னையும் சேர்த்து தான். எல்லாரும் திருடன் தான், வாய்ப்பு கிடைக்கும் வரை. ‘நான் தப்பே செய்யவில்லை’ என்று ஒருவன் சொன்னால், அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தம். எல்லா துறையிலும் ‘மீ டூ’ பிரச்னை இருக்கிறது. சினிமாவில் அது விரைவில் வெளியே வருகிறது. ‘நான் நினைக்கிற பெண் நான் இல்லை’ என எல்லா பெண்களும் சொல்கிறார்கள்.
ரகசிய வாழ்க்கை இல்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? எனக்குள் ஒரு ரகசிய வாழ்க்கை இருக்கிறது,’’
என்று அந்த பேட்டியில் காதல் சுகுமார் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்