Gundu Kalyanam: ‘கொஞ்ச நஞ்ச வேதனை கிடையாது கல்லை தூக்கி எரிவாங்க’- குண்டா இருந்த கேவலமா? - குண்டு கல்யாணம் பேட்டி
தான் குண்டாக இருப்பதால் சந்தித்த மோசமான அனுபவங்களை நடிகர் குண்டு கல்யாணம் பகிர்ந்து இருக்கிறார்.
“யாருடைய வாழ்க்கை என்றாலும் கேலி கிண்டல்கள் இல்லாமல் இருக்காது. எத்தனையோ பேர் கேலி செய்து இருக்கிறார்கள். குண்டா என்று சொல்வார்கள்..தடியா என்று சொல்வார்கள் எட்டு இட்லி இறா குழம்பு என்பார்கள். 10 இட்லி பருப்பு சாம்பார் என்று சொல்வார்கள்.
நான் படிக்கப் போகும் காலத்தில் இதை காரணம் காட்டி என்னை மிகவும் கஷ்டப்படுத்தினார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்கு என்னால் நடந்து கூட செல்ல முடியாது. பக்கத்தில் வந்து என்னை கிள்ளி விட்டு ஓடி விடுவார்கள். கல்லைத் தூக்கி எறிவார்கள்.
குண்டாக இருந்தால் அவ்வளவு கேவலமா என்ன? எவ்வளவு வேதனைப்பட்டிருக்கிறேன் தெரியுமா? கொஞ்சநஞ்ச வேதனை கிடையாது. வகுப்பறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன். என்னுடைய வாத்தியார் அதை பார்த்து என்னடா என்று கேட்பார். அவரிடம் கல்லை தூக்கி அடித்து விட்டார்கள் சார் என்று சொல்வேன். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை தைரியமாக இரு..என்று ஆறுதல் சொல்வார்.
யாரெல்லாம் என்னை கல்லை தூக்கி எறிந்தார்களோ அவர்கள் எல்லாம் பின்னால் என்னிடம் வந்து ஆட்டோகிராப் வாங்கினார்கள். ரஜினி சாரையே கிண்டல் செய்தார்கள். ரஜினிகாந்த் சாரின் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கேமரா எல்லாவற்றையும் வைத்து விட்டார்கள். முத்துராமன் சார் தான் அந்த படத்திற்கு இயக்குனர். பாபு சார் கேமரா மேன். எல்லாம் ரெடி ஆகிவிட்டது முதல் ஷாட்டை எடுக்கப் போகிறார்கள். நான் அந்த படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தேன். எஸ் பி முத்துராமன் சார் ரெடி ஆக்சன் என்று சொன்னவுடன் படப்பிடிப்பிற்குள் அங்கு இருந்தவர்கள் புகுந்து விட்டார்கள். டமால் டுமில் என்று எல்லாவற்றையும் போட்டு அடித்தார்கள்.
ரஜினிகாந்த் சாரை கிண்டல் வேறு செய்கிறார்கள். அவரை காப்பாற்றி கூட்டிச் செல்வது பெரும் காரியமாக இருந்தது. அவரை வெறுப்பேற்றுவதற்காக அந்த செயல் நடந்தது. அந்த காலத்தில் அவர் கொஞ்சம் கோபப்படுவார். வெறுப்பேற்றும் பொழுது அவர் கோபப்பட்டால் அது குறித்தான செய்திகள் பத்திரிகைகளில் வரும் அல்லவா? அதற்காக அது நடத்தப்பட்டது. எனக்கு சட்டை எல்லாம் கிழிந்து முதுகெல்லாம் காயம் உண்டாகி விட்டது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்