Charlie:ஆஸ்கர் மேடையில் கீரவாணிக்கு நான் அனுப்பிய மெசேஜ் - சார்லி உருக்கம்!
கீரவாணிக்கு தான் அனுப்பிய மெசேஜ் குறித்தும் அதற்கு அவர் அனுப்பிய பதில் குறித்தும் நடிகர் சார்லி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்
வரலட்சுமி சரத்குமார்,சந்தோஷ் பிரதாப், சார்லி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கொன்றால் பாவம்’.
கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சார்லி, “ நான் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அந்த இயக்குநரிடம் எனக்கு ‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இருக்கிறது. அந்த நிகழ்விற்கு நான் செல்ல வேண்டும் என்று சொன்னேன்.சென்று வாருங்கள் சார் என்று சொல்லிவிட்டு, ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதோடு அங்கு கண்டிப்பாக சென்றுதான் ஆக வேண்டும் என்பதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.
அதற்கு நான் அவரிடம் அது மிகவும் எளிமையான விஷயம். நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணியின் அன்பை பெற்ற நண்பர்களில் நான் ஒருவன். அவர் நேற்று ஆஸ்கர் வாங்கும் போது இந்த விருதை நான் மொத்த இந்தியாவிற்கும் சமர்பிக்கின்றேன்; ராஜமெளலிக்கு சமர்பிக்கின்றேன் என்று பேசினார்.
அவருக்கு பலரும் வாழ்த்துகளை சொல்லி வந்த நிலையில் நானும் அவருக்கு வாட்ஸ் ஆப்பில் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்தேன். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். சரியாக 2 மணிநேரத்தில் அவர் எனக்கு நன்றி என்று மெசேஜ் அனுப்பினார். அப்போதுதான் நான் நன்றியின் வலிமை என்பது பேசுவதோ, பகிர்ந்து கொள்வதையும் தாண்டி உணரக்கூடியது என்பதை உணர்ந்தேன். அதனால் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு நான் சென்றே ஆகவேண்டும் என்று சொல்லி விட்டு இங்கு வந்தேன்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்