தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Aadukalam Murugadoss Interview About Life

‘6 வருசமா முடங்கிட்டேன் … அதுக்கு நான் ஆள் இல்லை’ -ஆடுகளம் முருகதாஸ் உருக்கம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 18, 2023 06:00 AM IST

Aadukalam Murugadoss: கில்லியில் நடித்தது நல்ல அனுபவம். முதல் படமே விஜய் சார் படம். விஜய் சார் ரசிகன் நான். அவரை நேரில் பார்க்கிறேன், பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஒருமுறை அவரை பார்த்துக்கொண்டே டயலாக் விட்டுவிட்டேன்.

ஆடுகளம் முருகதாஸ்
ஆடுகளம் முருகதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘என்னோட சொந்த ஊர் பாண்டிச்சேரி. அங்கு ஆழி ஃசில்ரன்ஸ் தியேட்டர் குரூப் என்கிற ட்ராமா குரூப் இருந்தது. பக்கத்து வீட்டு அண்ணனை பார்த்து, அங்கு போய் சேர்ந்தேன். அங்கே இருந்து வேலு சரவணன் என்பவருடன் இருந்தேன். அங்கே இருந்து கூத்துப்பட்டறை முத்துசாமி சேர்த்துகிட்டார். 

கூத்துப்பட்டறையில் ஒரு நாள் தரணி சார், நாடகம் பார்க்க வந்தார். அங்கே இருந்து தான் கில்லி படத்தில் அவர் அழைத்துச் சென்றார். நடிக்கிறதுக்கு வந்தாச்சு, யார் கூப்பிட்டாலும் போக வேண்டியது தான். நடிக்க வந்த  பின், என்ன ரோலாக இருந்தால் என்ன. நான் எதையும் எதிர்பார்த்து நடிக்கவில்லை.

கில்லியில் நடித்தது நல்ல அனுபவம். முதல் படமே விஜய் சார் படம். விஜய் சார் ரசிகன் நான். அவரை நேரில் பார்க்கிறேன், பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஒருமுறை அவரை பார்த்துக்கொண்டே டயலாக் விட்டுவிட்டேன். ஆனால், தரணி சார் அதை மேட்ச் செய்து விட்டார். இன்னும் ஊர் பக்கம் போனால், ஆதிவாசி என்று தான் அழைக்கிறார்கள். 

கில்லி படம் பார்க்க, பாண்டிச்சேரி தியேட்டரில் டிக்கெட் இல்லை, என்னை உள்ளே விடவே இல்லை. ‘நான் நடித்திருக்கிறேன்’ என்று சொன்னேன், ‘ போய் சொல்லாதே போயா…’ என அனுப்பிவிட்டார்கள். பிளாக்ல டிக்கெட் வாங்கிட்டு போனேன், இடைவேளையில் தான் அந்த மவுசு தெரிந்தது. அந்த அனுபவத்தை சொல்லவே முடியாது. 

நான் நல்ல சட்டை போடுவதற்கும், நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கும், என் குழந்தைகள் நல்ல ஸ்கூலுக்கு போறதுக்கும் ஒரே காரணம் வெற்றி மாறன் சார் தான். அவர் தான் எனக்கு கடவுள். புதுப்பேட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, தனுஷ் சாரிடம் கதை சொல்ல அங்கு வந்தார். அப்போது பழக்கம் ஏற்பட்டது. அவரை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். 

பொல்லாதவன் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட். ஆனாலும் நான் அவரை ஃபாலோ பண்ணிட்டே இருந்தேன். ஒருநாள் திடீர்னு மதுரைக்கு வரச் சொன்னார். காரில் உட்காரச் சொல்லி, சலூனுக்கு அழைத்துச் சென்று, லோக்கல் பசங்க மாதிரி முடி வெட்டி விடச் சொன்னார். எனக்கு கண் கலங்குது.  இத்தனை வருசம் வச்ச முடி போகுதேனு. 

அப்புறம் ஒரு நம்பிக்கை, ‘சரி, முடி வெட்டுறாருனா, வாய்ப்பு உறுதி’ என்று ஆறுதல் பட்டுக்கொண்டேன். அப்படி தான் ஆடுகளம் வாய்ப்பு கிடைத்தது. அது இல்லைனா, நானே இல்ல. 

மதுரை பசங்களோடு பேசி பேசி அந்த ஸ்லாங் எல்லாம் காத்துக்கிட்டேன். துணை கதாபாத்திரங்களாக வருகிறதே என்று கவலைப்படும் சூழலில் நான் இல்லை.  வாய்ப்பு வந்தால் போதும் என்று தான் நினைக்கிறேன். நான் ஒன்று பெரிய நடிகன் இல்லை. இதை தான் பண்ணனும், இதை பண்ணக்கூடாது என் முடிவு எடுக்கும் அளவிற்கு நான் ஆளில்லை. இப்போ தான் முயற்சி எடுத்துட்டு இருக்கேன். 

இடையில் குழந்தைக்கு அடிபட்டு 3 ஆண்டு போச்சு, கொரோனாவில் 3 ஆண்டு போச்சு. 6 ஆண்டு சும்மா தான் இருந்தேன். இப்போ தான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். வெற்றிமாறன் சாரை பார்த்தே 6 ஆண்டு ஆச்சு. அவரை தொந்தரவு பண்ணக் கூடாதுனு தான் அவரைப் போய் பார்க்கல,’’

என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்