‘40 ஆண்டுகளாக நகர்த்த முடியாத நாற்காலி’ ஸ்ரீதர் என்கிற சூப்பர் ஹிட் இயக்குனர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘40 ஆண்டுகளாக நகர்த்த முடியாத நாற்காலி’ ஸ்ரீதர் என்கிற சூப்பர் ஹிட் இயக்குனர்!

‘40 ஆண்டுகளாக நகர்த்த முடியாத நாற்காலி’ ஸ்ரீதர் என்கிற சூப்பர் ஹிட் இயக்குனர்!

HT Tamil Desk HT Tamil
Feb 17, 2023 05:45 AM IST

Director C.V.Sridhar: பிரபலமாக இருந்த வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இவருடையதுதான், நண்பர்களுடன் சேர்ந்து படங்களை தயாரித்தார். கூடவே மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், வி.சந்தானம் போன்ற அன்றைய பிரபல இயக்குநர்களுடனும் நல்ல பழக்கமாகி இயக்குநர் அவதாரம் எடுத்தார், ஸ்ரீதர்.

ஜெயலலிதா உடன் இயக்குனர் ஸ்ரீதர்
ஜெயலலிதா உடன் இயக்குனர் ஸ்ரீதர்

பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கதை என சுற்றியவர் 18 வயதிலேயே வந்து சேர்ந்த இடம் ஏவிஎம். ஆனால், 1951ல் சினிமாவுக்குள் வந்த அவரை மெருகேற்றியது அன்றைய பிரபலமான டிகேஎஸ் பிரதர்ஸ் குரூப்பின் அவ்வை டி.கே.சண்முகம். நிறைய நாடகம், வாய்ப்புகளை தந்து ஸ்ரீதரின் எழுத்துப் பசிக்கு தீனி போட்டார், டி.கே.எஸ். 1950களின் ஹிட் படங்களான ரத்த பாசம், எதிர் பாராதது, புனர்ஜென்மம், அமரதீபம்... இவரது எழுத்துகளே. வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'யின் ஒரிஜினல் வெர்சனான சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த 'உத்தம புத்திரன்' படமும் இவரது திரைக்கதைதான்.

அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இவருடையதுதான், நண்பர்களுடன் சேர்ந்து படங்களை தயாரித்தார். கூடவே மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், வி.சந்தானம் போன்ற அன்றைய பிரபல இயக்குநர்களுடனும் நல்ல பழக்கமாகி இயக்குநர் அவதாரம் எடுத்தார், ஸ்ரீதர். அப்படி அவர் இயக்குநரான முதல் படம் ஜெமினி கணேசன் நடித்த 'கல்யாண பரிசு'. 1959ல் வெளியான அந்த படம், இன்று வரை தமிழில் பேசப்படும் படங்களில் ஒன்று.

இயக்குனர் சி.வி.ஸ்ரீதர்
இயக்குனர் சி.வி.ஸ்ரீதர்

காஷ்மீரில் முதன் முதலில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட தமிழ் படமான 'தேனிலவு' இவரது இயக்கம். மீண்ட சொர்க்கம், ஊட்டி வரை உறவு, நெஞ்சில் ஆலயம், போலீஸ்காரன் மகள், கலாட்டா கல்யாணம்... இப்படி நிறைய படங்களை 1960களிர் ஸ்ரீதர் இயக்கி இருக்கிறார்.

இதில் 1962ல் வெளியான முத்துராமன், தேவிகா, கல்யாண் குமார் நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் எல்லாம் ஒரு மருத்துவமனைக்கு உள்ளேயே மொத்த படத்தையும் ஸ்ரீதர் எடுத்திருப்பார். அதுவும் ஒரே வாரத்துக்குள் படப்பிடிப்பு முடிந்ததாக சொல்வார்கள். முக்கோண காதல் கதை கொண்ட இந்த படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் வசூலை வாரி குவித்தது.

தமிழின் முதல் ஈஸ்ட்மெண்ட் கலர் படமான 'சிவந்த மண்', நிறைய பிரபலங்களை அடையாளம் காட்டிய 'வெண்ணிற ஆடை', நாகேஷ் என்றாலே இன்று வரை நினைவுக்கு வரும் கதை சொல்லும் சீன் இடம் பெற்ற 'காதலிக்க நேரமில்லை'... எல்லாமே ஸ்ரீதர் இயக்கம் தான்.

ஹீரோவாக இருந்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு காமெடி பாதை, தங்கவேலுவுக்கு 'கல்யாண பரிசு'... நாகேஷுக்கு 'காதலிக்க நேரமில்லை'... 'வெண்ணிற ஆடை' படம் மூலம் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி... இதுபோல ரவிச்சந்திரன், முத்து ராமன், காஞ்சனா என பலருக்கும் அடையாளம் கொடுத்தவர், இயக்குநர் ஸ்ரீதர். 1970களில் துவங்கி 1980ஸ் வரை பெயர் பெற்ற சித்ராலயா பட நிறுவனத்தை சித்ராலயா கோபுவுடன் இணைந்து துவக்கியதும் இவர் தான்.

ஸ்ரீதரின் கல்யாண பரிசு திரைப்படத்தின் பிரபல காட்சி
ஸ்ரீதரின் கல்யாண பரிசு திரைப்படத்தின் பிரபல காட்சி

ஸ்ரீதர் பாணி படங்கள் எல்லாம் எம்ஜிஆருக்கு ஒத்து வராதவை. அதனால் அவரை அதிகம் இயக்கவில்லை. ஆனால் 1970களின் ஆரம்பத்தில் பொருளாதார ரீதியாக கொஞ்சம் சிக்கலில் இருந்த ஸ்ரீதருக்கு எம்ஜிஆர் கைகொடுத்தார். 'உரிமைக் குரல்' படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் தான். அடுத்து 'மீனவ நண்பன்', 'அண்ணா நீ என் தெய்வம்' என எம்ஜிஆர் படங்களை இயக்கினார். 1977ல் எம்ஜிஆர் முதல்வரானதால் படம் நடிப்பதை நிறுத்தியதால் 'அண்ணா நீ என் தெய்வம்' பாதியில் நின்று போனது. அந்த படத்துக்காக ஸ்ரீதர் எடுத்த காட்சிகள் தான் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் இயக்கி 2 வேடங்களில் நடித்த 'அவசர போலீஸ் 100' படத்தில் சேர்க்கப்பட்டன.

இப்படி எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, ஜெமினி, ரவிச்சந்திரன், முத்துராமன் இயக்கிய ஸ்ரீதர், அடுத்த தலைமுறை நட்சத்திரங்களையும் 1980களில் இயக்கினார். அதுதான் இயக்குநர் ஸ்ரீதர்.

ரஜினி, கமல் இணைந்து நடித்த 'இளமை ஊஞ்சலாடுகிறது', கமலின் 'நானும் ஒரு தொழிலாளி', ரஜினியின் 'துடிக்கும் கரங்கள்', முத்துராமனின் மகன் கார்த்திக்கும் ஜெமினி மகள் ஜீஜியும் இணைந்து நடித்த 'நினைவெல்லாம் நித்யா', 80ஸ் கனவு நாயகன் மோகன் நடித்த 'தென்றலே என்னைத் தொடு'... அப்புறம் யாரோ எழுதிய கவிதை, ஒரு ஓடை நதியாகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன்... என 80ஸ் வரை ஸ்ரீதர் இயக்கிய படங்கள் ஏராளம். சீயான் விக்ரமை நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்திய 1991ல் வெளியான 'தந்து விட்டேன் உன்னை' படமும் ஸ்ரீதர் இயக்கம் தான்.

ஸ்ரீதரின் உரிமைக்குரல் படத்தின் போஸ்டர்
ஸ்ரீதரின் உரிமைக்குரல் படத்தின் போஸ்டர்

1950, 60களில் தமிழுடன் ஏராளமான இந்தி படங்களையும் இயக்கியவர், ஸ்ரீதர். இந்தியில் 1956ல் கிஷோர் குமார் துவங்கி 1980களில் சத்ருகன் சின்ஹா வரை இயக்கி இருக்கிறார்.

ஸ்ரீதர் படம் என்றாலே பாடல்கள் நிச்சயம் ஹிட் என்றே சொல்லலாம். மேலே சொன்ன படங்களின் பாடல்களே அதை உறுதி செய்யும். பாடகர் கம் இசையமைப்பாளர்களான ஏ.எம்.ராஜா துவங்கி எஸ்பிபி வரையிலும் அவர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். இது போலவே எம்எஸ்வி தொடங்கி இளையராஜா வரை இசையமைத்திருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி பாடல்களுக்கு உயிரூட்டியவர்.

40 ஆண்டு கால நாயகர்கள் அல்லது நீண்ட காலம் நடித்த நடிகர்களை பார்த்திருப்போம். ஆனால் 40 ஆண்டுகளாக திரைக்கதை, இயக்கம் என கோலோச்சி தமிழிலும் இந்தி ரீ மேக்கிலும் ஹிட் படங்கள் கொடுத்த ஒரே இயக்குநர் ஸ்ரீதர் மட்டுமே.

(நெல்லை ரவீந்திரன் எழுத்து)

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.