RK Suresh:ஆருத்ரா மோசடி;பாஜக ஹரீஷின் வாக்குமூலம்;சிக்கிய RK சுரேஷிற்கு நோட்டீஸ்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு பங்கு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது சென்னை அமைந்தகரையில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் என்ற நிறுவனத்தின் சார்பில், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரபடுத்தப்பட்டது.
இந்த விளம்பரத்தை பார்த்த பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூ 2,438 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் திருப்பித்தராமல் இழுத்தடித்தாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தாமாக முன்வந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும் ஆருத்ரா பெயரில் இயங்கிவந்த 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளரான ஹரீஷ் கைது செய்யப்பட்டார். அத்துடன் நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் இது வரை 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜ் ஆகியோர் அடங்குவர். இது மட்டுமல்லாமல் மேனஜர் மற்றும் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஐயப்பன், ரூசோ,ராஜசேகர் ஆகியோரும் இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் ஏஜெண்டாக செயல்பட்ட ரூசோவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பாஜக நிர்வாகியும், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து ஆர்.கே.சுரேஷை காவல்துறையினர் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ஆர்.கே.சுரேஷ் துபாய் தப்பித்து சென்றதும், 2 மாதங்களாக அவர் இந்தியாவில் இல்லை என்று தகவல்கள் வெளியாகின.
முன்னதாக விசாரணைக்கு ஆர்.கே. சுரேஷ் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் கூறியிருந்த நிலையில், தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோர் வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷிற்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
டாபிக்ஸ்