HBD Meena: கதைபேசும் கண்கள்.. தனித்துவ நடிப்பு.. தடம்பதித்த நடிகை மீனா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Meena: கதைபேசும் கண்கள்.. தனித்துவ நடிப்பு.. தடம்பதித்த நடிகை மீனா

HBD Meena: கதைபேசும் கண்கள்.. தனித்துவ நடிப்பு.. தடம்பதித்த நடிகை மீனா

Marimuthu M HT Tamil
Sep 16, 2023 05:20 AM IST

நடிகை மீனாவின் பிறந்த நாள் தின சிறப்புக்கட்டுரையினைக் காணலாம்.

நடிகை மீனாவின் பிறந்தநாள் தின சிறப்புப் பகிர்வு
நடிகை மீனாவின் பிறந்தநாள் தின சிறப்புப் பகிர்வு

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தை துரைராஜூக்கும், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாய் ராஜமல்லிகாவுக்கும்  1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 இதே தேதியில் மகளாகப் பிறந்தவர், நடிகை மீனா. 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை நைனிகாவுக்கு, நைனிகா என்னும் மகள் உள்ளார். 

திரை வாழ்க்கையில் முத்திரைபதித்த மீனா: நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்ததன்மூலம் சிறுவயதிலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து கதாநாயகியாக, ராசாவின் மனசிலே என்னும் திரைப்படத்தில் ராஜ்கிரணுடன் நடித்ததன்மூலம் தமிழ் சினிமாவில் 1991ஆம் ஆண்டு அறிமுகமானார். அதிலுமே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். குறிப்பாக, எஜமான்,சேதுபதி ஐபிஎஸ், வீரா, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பொற்காலம்,  ஆனந்த பூங்காற்றே,  வானத்தைப்போல, வெற்றிக்கொடிகட்டு, ரிதம் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா இணைந்து நடித்த திருஷ்யம் திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக்கானது. 

நடிப்பில் தனக்கான தனி முத்திரையைப் பதித்தவர்: பல தமிழ்ப்படங்களில் மீனா நடித்திருந்தாலும், முத்து படத்தில் வரும் ’இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு’ கேரக்டரில் நடித்த நடிகை மீனாவை இன்றும் யாரும் மறக்கமுடியாது. அதேபோல், வெற்றிக்கொடிகட்டு படத்தில் காதலித்து வந்த கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டதாய் எண்ணிக்கொண்டு, புகுந்த வீட்டில் மீனா படும் துயரங்கள், நம் வீட்டில் நடப்பதுபோன்று நடிப்பில் கடத்தியிருப்பார். அந்தளவுக்கு அப்படத்தில் இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்.

நடிக்கத் தயங்கும் கேரக்டரிலும் நடித்தவர்: ஒரு முன்னணி நடிகையாக வலம்வருபவர், ஒரு குழந்தைக்கு அம்மாவாக, கணவனை இழந்தவராக நடிப்பதில் தமிழ் சினிமாவில் ஆர்வம்காட்ட மாட்டார்கள், நடிகை மீனா அதில் விதிவிலக்கு. ஆனந்தப் பூங்காற்றே திரைப்படத்திலும், ரிதம் திரைப்படத்திலும் ஒரு கைம்பெண் போன்று நடித்திருப்பார் மீனா. அதுவும் குழந்தையின் தாயாக நடித்திருப்பார், மீனா. இதன்மூலம் கதைப் பிடித்திருந்தால் தான் எந்தரோல்களும் செய்வேன் என மறைமுக வாழ்ந்து காட்டியவர், நடிகை மீனா. 

நாட்டாமையிலும் அவ்வை சண்முகியிலும் நடிகை மீனாவின் ஃபெர்மான்ஸ்: நாட்டாமையில் பெரிய இடத்துப்பெண்ணாக இருந்தாலும் தன் கணவருக்கு ஓர் இக்கட்டான சூழல்வரும்போது அவருக்குப் பக்கபலமாக இருந்து குடும்பத்தை வழிநடத்தும் பெண்ணாக நடித்திருப்பார். அவ்வை சண்முகி திரைப்படத்திலும் உலக நாயகனுடன் ஒவ்வொரு ஃபிரேமிலும் தீனிபோடும் அளவுக்கு நடித்திருக்கும் நடிகை மீனா,  காதல் கணவனைப் பிரிந்து வாடும் காட்சிகளில் கண்களிலேயே தனது காதலை, பிரிவை,துயரை வெளிப்படுத்தியிருப்பார்.

இப்படி கண்களில் கதை பேசி,தனது தனித்துவ நடிப்பில் தடம்பதித்த நடிகை மீனாவுக்கு இன்று பிறந்தநாள். அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.