31 Years Of Thevar Magan: 'புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா’ - தேவர் மகனின் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  31 Years Of Thevar Magan: 'புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா’ - தேவர் மகனின் கதை

31 Years Of Thevar Magan: 'புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா’ - தேவர் மகனின் கதை

Marimuthu M HT Tamil
Oct 25, 2023 06:18 AM IST

தேவர் மகன் திரைப்படம் வெளியாகி 31ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.

31 Years Of தேவர் மகன்
31 Years Of தேவர் மகன்

தேவர் மகன் திரைப்படத்தின் கதை என்ன? லண்டனில் படிப்பினை முடித்து தனது ஆந்திராவைச் சார்ந்த காதலியுடன் சொந்த ஊர் திரும்புகிறார், சக்திவேல். இவர் சென்னையில்  சென்று உணவகங்களைத் திறந்து பிசினஸ் செய்வது தொடர்பாக, தனது தந்தை பெரிய தேவரிடம் அனுமதி கேட்கிறார். ஊர் தலைவரான பெரிய தேவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். மேலும், தனது மகன் சக்திவேல் தனது ஊரில் இருந்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என ஆசைப்படுகிறார். பெரிய தேவருக்கும் அவரது சகோதரர் சின்ன தேவர் குடும்பத்துக்கும்  இடையில் நீண்டநாள் பகைவுள்ளது. இதனால், ஊரே இரண்டு பட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழலில் தனது காதலியுடன் ஊரில் சென்று சுற்றிப் பார்க்கிறார், சக்திவேல். அப்போது உடன் வந்த இசக்கி என்னும் நண்பன் ஊரில் வெகுநாட்கள் மூடிய நிலையில் இருந்த கோயிலின் கதவினை சக்திவேலின் அன்புக்கிணங்க திறந்து காட்டுகிறார். அது சின்னதேவரின் மகன் மாயனால் மூடப்பட்ட பிரச்னைக் கோயில். பின், இதுகுறித்து அறிந்த மாயன், இசக்கியின் கைகளை வெட்டி வீசிவிடுகிறார். ஊர் இரண்டுபடுகிறது. சக்திவேல் பின், தனது தந்தை அனுமதியுடனும் சட்ட ஆலோசனையின்படியும் அனைவருக்கும் பொதுவானதாக மாற்றி அக்கோயிலை அரசு அதிகாரிகளை வைத்து திறந்துவிடுகிறார். 

இதனால் அதிர்ந்து போன மாயன், பின் பெரிய தேவரை ஆதரிக்கும் கிராம மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் அணையை உடைத்து மக்களை கொல்ல சதித்திட்டம் செய்கிறார். அது அரங்கேறி சிலர் இறக்கவும் செய்கின்றனர். அதில் அணையை உடைக்க வெடிமருந்தினை வைத்தவர்களை காவல் துறையினரிடம் பிடித்து ஒப்படைக்கின்றார், சக்திவேல் எனும் சக்தி. ஆனால், அதைச் செய்யச் சொன்ன மாயனின் பெயரை பிடிபட்டவர்கள் சொல்லவில்லை.

மேலும் கூடுதலாகப் பழிவாங்கும் நோக்கில் ஊரில், தனக்குச் சொந்தமான நிலம் வழியாகச் செல்லும் பொதுவழியை கம்பி போட்டு மூடுகிறார், மாயன். இதனால் பலர் பல கிலோமீட்டர் நடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அதன்பின் நடக்கும் பஞ்சாயத்தில் பெரிய தேவர் மாயனால் அவமானப்படுத்தப்பட்டு, அன்று இரவே மாரடைப்பினால் மரணம் அடைகிறார். ஊருக்கு யார் அடுத்த தலைவன் என்ற கேள்வியில் தத்தளிக்கும்போது, கம்பீரமாக வந்து நின்று, தனது தந்தை விட்டுச் சென்ற நற்பணிகளை செய்கிறார், சக்திவேல். 

மேலும், பொதுவழி அருகே சொந்த இடம் வைத்திருக்கும் பரமசிவத்திடம் அந்த இடத்தை ஊருக்காக விட்டுக்கொடுக்கச்சொல்லிப் பேசுகிறார், சக்திவேல். அவ்வாறு அந்த இடத்தை ஊருக்காக விட்டுக்கொடுத்தால், அவரது மகளுக்கு ஒரு பெரிய இடத்தில் திருமண ஏற்பாடு செய்துவைப்பதாக வாக்கு கொடுக்கிறார், சக்திவேல். எல்லாம் கூடிவந்தவேளையில், மாயனின் தாக்குதலுக்கு அஞ்சி மணமகன் ஓடிவிடுகிறார். இதனால் தனது மகளின் திருமணம் தடைபட்டுப்போனதே என புலம்புகிறார், பரமசிவம். பின், சொன்ன வாக்கை காப்பாற்ற, ஊர் மக்கள் எளிதாக பயணிக்க பரமசிவத்தின் மகள் பஞ்சவர்ணத்தை திருமணம் செய்துகொள்கிறார், சக்திவேல். 

அது பிடிக்காத மாயன் பல்வேறு இடைஞ்சல்களை சக்திவேலுக்குத் தருகிறார். இறுதியாக சக்திவேல் மாயனின் தலையைத் துண்டித்துவிட்டு சிறைசெல்கிறார். அதாவது தனது சித்தப்பாவின் மகனான அண்ணனையே கொன்றுவிட்டு அழுகிறார், சக்திவேல்.  ஊர் மக்கள் இக்கொலைக்குரிய தண்டனையைத் தாங்கள் ஏற்கமுன்வந்தபோதும் கத்தி, அரிவாளை எல்லாம் விட்டுவிட்டுப் போய் படித்து முன்னேறச் சொல்கிறார், சக்திவேல்.

கதாபாத்திரங்களாக வாழ்ந்தவர்கள்: இதில் பெரியதேவராக சிவாஜி கணேசனும், சக்திவேலாக கமல்ஹாசனும், பஞ்சவர்ணமாக ரேவதியும், மாயனாக நாசரும் நடித்து இருந்தனர். ஆந்திராவைச் சார்ந்த காதலி பானுவாக, நடிகை கெளதமியும் இசக்கியாக வடிவேலுவும் மற்றும் பல நட்சத்திரப் பட்டாளங்களும் நடித்து இருந்தனர். 

மற்ற பணிகளைப் புரிந்தவர்கள்: இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசன் எழுத, மலையாள இயக்குநர் பரதன் படத்தை இயக்கியிருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுசெய்ய, இசைஞானி இளையராஜா இசைப்பணிகளை மேற்கொண்டிருந்தார். 

படம் வெளியாகி 31 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும், இப்படம் வெளியான புதிதில் இப்படத்தில் இடம்பெற்ற ’போற்றி பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே’ என்னும் பாடலால், பல இடங்களில் இரு தரப்பினருக்கு இடையில் பிரச்னை வெடித்தது. இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் கமல்ஹாசன் சொல்லும், 'புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா’ என்னும் வசனம் சம காலத்துக்கும் பொருந்தும். 

காலம் கடந்தும் அரிவாள் கலாசாரத்தை ஒதுக்கிய தேவர் மகன் வாழட்டுமே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.