தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சைப்பேச்சு.. குழுக்களிடையே பகை உருவாக்கம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் நடிகை கஸ்தூரி மீது வழக்கு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சைப்பேச்சு.. குழுக்களிடையே பகை உருவாக்கம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் நடிகை கஸ்தூரி மீது வழக்கு

தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சைப்பேச்சு.. குழுக்களிடையே பகை உருவாக்கம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் நடிகை கஸ்தூரி மீது வழக்கு

Marimuthu M HT Tamil
Nov 05, 2024 08:54 PM IST

தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு.. பல குழுக்களிடையே பகை உருவாக்கம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் நடிகை கஸ்தூரி வழக்கு

தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சைப்பேச்சு.. குழுக்களிடையே பகை உருவாக்கம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் நடிகை கஸ்தூரி மீது வழக்கு
தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சைப்பேச்சு.. குழுக்களிடையே பகை உருவாக்கம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் நடிகை கஸ்தூரி மீது வழக்கு

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே அந்தணர்கள் சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, ‘’ஒவ்வொரு இடத்திலும் அவன் இவனை ஒடுக்கினான். இவன் அவனை ஒடுக்கினான் என புனைந்துவிட்டுட்டாங்க. வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்னு சொன்னது வெள்ளையர்களை இல்லை. ஐயர், ஐயங்காரை தான். ஆனால், இதில் சிலர் மாறி நாங்களும் பொய் சொல்வோமேன்னு போய் நிற்கிறாங்க. இறைச்சி சாப்பிடுவேன்னு சொல்றது எல்லாம் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்த துருப்பிச்சீட்டை எடுத்துத் தருவது மாதிரி.

நம்ம அந்தணர் இனத்தை இழிவுபடுத்தினார் என்றால், அடிவருடி, சொம்புன்னு சொன்னதாகச் சொன்னார்கள். என் நிலையை எல்லாம் யோசிச்சுப் பாருங்க. நேராக ஒரு விஷயம் தான். ஏனென்றால், பெண்ணாகப் போய்விட்டேன், நடிகையாகப் போய்விட்டேன். அவங்க சொல்ற வார்த்தை திராவிடியா தனத்தைவிட கொச்சையான வார்த்தையொன்றும் கிடையாது. அப்படியே சொன்னாலும் என் சுய உழைப்பைப் போட்டு செய்யிறேன்னு சந்தோஷமாக சொல்லிட்டுப் போயிடுவேன். உன்னை மாதிரி பிளவுவேலை செய்து, மாமா வேலை செய்யிறதை விட, என்னுடைய வேலை பரவாயில்லை என்று சொல்வேன்.

சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தணர் - கஸ்தூரி

சிவச்சாரியர் ஒருவர் சொன்னார், இத்தனை நாட்கள் நாம் சாத்வீகமாக இருந்துட்டோம் என்று. ஐயா, இல்லை ஐயா, சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தணர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள்.

ஆரிய வந்தேறின்னு சொல்றாங்க. யார் வந்தேறி. கைபர், போலான் கணவாய் மூலமாக வந்த பல சமயங்கள் சார்ந்தோர் வந்தாங்க. அவர்களைப் பற்றியெல்லாம், பேசினால், உங்கள் ஓட்டு தான் குறையும்.

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வந்ததாகச் சொல்லப்படுபவர்களை வந்தேறி எனச் சொல்கிறீர்களே, சங்க காலம் முதல் தமிழர்கள் கோயில்களில் சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

எப்படி ஆரியப் பண்பாடு தமிழகத்துக்குள் வரும்போது ஷத்திரியர்கள் எனும்போது வன்னியர்களும் தேவர்களும் இணைந்துகொண்டார்களோ., வைஷ்யர்கள் என்ற பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்துகொண்டார்களா., அதேபோல் கோயில் பணிகளைச் செய்ய சிவச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள், பண்டாரத்தினர், சைவப் பிள்ளைமார்கள் ஆகியோர் இணைந்துகொண்டார்கள்.

தெரியாமல் தான் கேட்கிறேன். முந்நூறு வருஷத்துக்கு முன்பு, ராஜாக்களுக்குக் கூட சேர்த்துக்கிட்ட அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கு பேசினவர்கள் எல்லாம், இன்றைக்கு தமிழ் எங்கள் இனம் என்றுசொல்லும்போது, எப்போவோ வந்த பிரமாணர்களைத் தமிழர்கள் இல்லையென்று சொல்ல நீங்கள் யாருங்க.

ஹைதராபாத்தில் திராவிடர்கள் பற்றி தெரியாத தெலுங்கர்கள் - கஸ்தூரி:

அதனால் தானே, தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கமுடியவில்லை. நான் ஹைதராபாத்தில் தான் நான்கு வருடங்கள் இருக்கிறேன். நீங்கள் எல்லாம் திராவிடர்களா அப்படின்னு தெலுங்கு மொழிபேசும் நபர்களிடம் கேட்கும்போது, என்னது என கேள்வி கேட்குறாங்க. உங்களைவிட நன்கு தெலுங்கு பேசுறவங்க தமிழ்நாட்டில் இருக்காங்க. 5 அமைச்சர்கள் இருக்கிறாங்க அப்படின்னு சொன்னேன். உடனே, ஹைதராபாத் காரங்க சந்தோஷமாகப் பார்க்கிறாங்க.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு அப்படின்னு திருமா சார் கேட்டார். அவர் தெரிந்துபேசினாரா, தெரியாமல் பேசினாரா எனத் தெரியாது. ஆதிகுடிகளான பறையர் குடிகளுக்குத் தான் பங்கு கிடையாது. தெலுங்கு பேசினால் ஏற்கனவே நிறையப் பங்கு கொடுத்திட்டுதான் இருக்காங்க. விடுங்க. ஆனால், அவங்க நம்மகிட்ட இருந்து எதையும் அடிச்சுபிடுங்காமல் இருந்தால் சரி’’ என நடிகை கஸ்தூரி பேசியிருந்தார்.

இதற்குப் பல தெலுங்கு அமைப்புகள் கஸ்தூரியைக் கடுமையாக சாடின. அதன்பின், இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. குறிப்பாக திமுக எம்.பி.ஆ. ராசா, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கடுமையாக கஸ்தூரியை சாடினர்.

இந்நிலையில் தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்தப் புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப்பதிவு விபரத்தின்படி, அவர் மீது கலவரத்தைத் தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.