38 Years of Mudhal Mariyadhai : ‘பூங்காத்து திரும்புமா?’ – நினைவைவிட்டு நீங்கா முதல் மரியாதை!
38 Years of Mudhal Mariyadhai : சாகும் வரை ராதாவுக்காக சிவாஜி ஏன் மரண தருவாயிலும் காத்திருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ். பாரதிராஜாவின் வழக்கமாக கிராமத்து பாணியிலான கதை. இந்தப்படம் ஆங்கிலப்படம் மற்றும் ஜெயகாந்தனின் சமூகம் என்பது நாலு பேர் என்ற நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது.

மரணப்படுக்கையில் இருக்கும் கிராம பெரியவரின் பிளாஷ் பேக்தான் முதல் மரியாதை. கிராம பெரியவர் சிவாஜி கணேசன், அவரது மனைவி வடிவுக்கரசி. இருவருக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையே இருந்திருக்காது. கட்டாயத்துக்காக வடிவுக்கரசியை திருமணம் செய்துகொண்டிருப்பார். அவர்களுக்கு ஒரு மகள் இருப்பார். அந்த பெண் திருமணம் முடித்து வேறு ஊரில் வசித்துக்கொண்டிருப்பார்.
அந்த ஊருக்கு பரிசல் ஓட்டும் பெண்ணாக வருபவர்தான் ராதா, சிவாஜி கணேசனுக்கும், ராதாவுக்கும் இடையே நிறைய வயது வித்யாசம் இருக்கும். ஊரில் சுட்டித்தனம் செய்துகொண்டு படகு ஓட்டி பிழைத்துக்கொண்டிருக்கும் ராதா மீது சிவாஜிக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும். அது காதலாக உருவெடுக்கும். அந்த விஷயம் ஊரில் அரசல் புரசலாக பரவி, ஏற்கனவே கணவரை திட்டித்தீர்க்கும் மனைவி வடிவுக்கரசியை மேலும் அவரை திட்ட வைக்கும்.
நீதி, நேர்மைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் கிராம தலைவராக இருக்கும் சிவாஜியின் மருமகன் ஊருக்கு வந்து தங்கும்போது, அந்த ஊரில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார். அந்த பெண்ணின் தந்தை ஊர் தலைவர் என்ற பெயரில் சிவாஜியிடம் முறையிட, சிவாஜி நீதிக்கு கட்டுப்பட்டு தன் மருமகனையே போலீசிடம் பிடித்துக்கொடுப்பார். இதற்கும் சேர்த்து மனைவி வடிவுக்கரசியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார்.
