தமிழ் செய்திகள்  /  Entertainment  /  33 Years Since The Release Of Pudu Nellu Pudhu Naathu Movie

Puthu Nellu Puthu Nathu : கொடூர வில்லனாக நெப்போலியன்.. சுட்டி பெண்ணாக சுகன்யா..33ஆம் ஆண்டில் புது நெல்லு புது நாத்து!

Divya Sekar HT Tamil
Mar 15, 2024 05:40 AM IST

Puthu Nellu Puthu Nathu : தாமிரபரணியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிறு கிராமத்தை மையப்படுத்தி இந்த கதை தொடங்குகிறது. பாரதிராஜா திரைப்படத்தின் கதையானது எளிமையாக இருந்தாலும், கதை சொல்லும் போக்கு அதில் ரசிகர்களை அமர வைக்கும் திறன் என்பது பாரதிராஜாவால் மட்டுமே சாத்தியமாகும்.

33 ஆண்டுகள் புது நெல்லு புது நாத்து
33 ஆண்டுகள் புது நெல்லு புது நாத்து

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குநர்களில் தற்போது வரை உச்சத்தில் இருக்கும் இயக்குநர் பாரதிராஜா. இவர் தனது திரைப்படத்தில் பல பேரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் பலரும் தமிழ் திரைத்துறையை ஒரு வட்டமே அடித்திருக்கின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

நடிகை சுகன்யா, நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட ஒன்பது பேரை ஒரே படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய திரைப்படம் தான் புது நெல்லு புது நாத்து. இந்த படத்தில் பாரதிராஜா புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருப்பார். இசை இசைஞானி இளையராஜா தான். இந்த திரைப்படத்தின் கதையானது தாரஸ் புல்பா என்ற ரஷ்யக் கதையிலிருந்து நமக்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட கதையாகும்.

தாமிரபரணியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிறு கிராமத்தை மையப்படுத்தி இந்த கதை தொடங்குகிறது. பாரதிராஜா திரைப்படத்தின் கதையானது எளிமையாக இருந்தாலும், கதை சொல்லும் போக்கு அதில் ரசிகர்களை அமர வைக்கும் திறன் என்பது பாரதிராஜாவால் மட்டுமே சாத்தியமாகும்.

கொடூர வில்லனாக இரக்கமற்ற நபராக நெப்போலியன் நடித்து இருப்பார். ஒரு வட்டிக்காரனுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை. இதனை பாரதிராஜா தனது பாணியில் உணர்வு பூர்வமான காட்சியாக கொடுத்து அசத்தி இருப்பார்.

கண்களில் நீரைத் தாங்கி கதை முழுக்க நம்மைப் பயணம் செய்ய வைப்பதில் பாரதிராஜா வல்லவர். இப்படத்தில் புது முகங்கள் நடித்தாலும் அவர்கள் புதுமுக நடிகர்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு அளவிற்கு பாரதிராஜா அவர்களை நடிக்க வைத்து இருப்பார்.

சிறுவயதிலேயே வயதான பண்ணையாராக நடிகர் நெப்போலியன் நடித்திருப்பார். வில்லனாக முதன் முதலில் நெப்போலியன் இந்த திரைப்படத்தில் தான்  அறிமுகம். சிறு வயதிலேயே தன் வயதுக்கு மீறிய பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இதில் அவர் தன்னை எதிர்க்கும்ஏழை தொழிலாளியை கொன்று அவனது கைநாட்டு மூலமாக அவன் சொத்தை அபகரிக்கும் கொடூர வில்லனாக நடித்து மிரட்டிஇருப்பார்.

கிராமத்தில் சுற்றித் திரியும் சுட்டி இளம் பெண்ணாக நடிகை சுகன்யா நடித்திருப்பார். நெப்போலியன், சுகன்யா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களாக ஜொலித்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படத்தில் கதிர்வேலாக ராகுல் நடித்து இருப்பார். அதேபோல கிருஷ்ணவேணியாக சுகன்யாவும், முத்துவேல் வேடத்தில் ராம் அர்ஜுனும், மரிக்கொழுந்துவாக ருத்ராவும், சங்கரலிங்கமாக நெப்போலியனும், வீரையாவாக பொன்வண்ணனும், தாயம்மாவாக ரேணுகாவும் நடித்து இருப்பார்கள்.

இசை என்று சொன்ன உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் இசைஞானி தான். பரணி பரணி என்ற பாடலில் தொடங்கி சிட்டான் சிட்டான் குருவி உனக்கு தானே என இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட். தனக்கான பாணியில் இசையமைத்து அசத்தி இருப்பார் இளையராஜா. ஒரு இயற்கை எழில் மிகுந்த கிராமத்திற்குள் சென்று வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் பாரதிராஜாவின் திரைப்படத்தைப் பார்த்து விட்டு வந்தால். அந்த எதிர்பார்ப்பு இந்த படத்தில் முழுமையாகப் பூர்த்தியாக்கி இருக்கும்.

புது நெல்லாக விதைக்கப்பட்ட அனைத்தும் புது நாத்தாகி தற்போது விளைந்த நெல்லாக மாறி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றும் இந்த திரைப்படம் புது நெல்லாகவே இருந்து வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்