29 Years of Karuththamma: ‘கண்களை சிவக்க வைத்த கருத்தம்மா.. போனாலும் மறக்காத பொன்னுத்தாயி’
ஸ்கேன் சென்டர்களில் இங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவிக்கப்பட மாட்டது என்ற அறிவிப்பு பலகை தொங்கும் காலம் வரை கருத்தம்மா இந்த சமூகத்தில் தன் பிறப்புரிமைக்காய் போராடுவாள்
பெண்சிசு கொலையை அடிப்படையாக கொண்டு 1994ல் வெளிவந்த திரைப்படம் கருத்தம்மா.
பாரதி ராஜா இயக்கத்தில் ராஜா, மகேஷ்வரி, ராஜஸ்ரீ, சரண்யா, பொன்வண்ணன், பேராசிரியர் பெரியார் தாசன், ஜனகராஜ், வடிவுக்கரசி, வடிவேலு என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர் ரகுமானின் இசை இசை பக்கபலமாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் கண்ணன் அன்றைய தேனி சுற்றுவட்டார பகுதிகளின் அழகை தன் கேமரா கண்ணால் மேலும் மெருகூட்டி காட்டியிருப்பார். கிராமத்து மக்களின் குறிப்பாக பெண்களின் பாடுகளை தனது பாடல் வார்த்தைகளால் வடித்திருந்தார் வைரமுத்து. குறிப்பாக போராளே பொன்னு தாயி பாடல் இன்று கேட்பவர்களை உருக்குலைய வைத்து விடும். ஸ்வர்ண லதா குரல் நம்மை மேலும் உருக வைக்கும்.
கிராமத்தில் ஏழை விவசாயியான மொக்கையன் தனக்கு பிறந்த 3 ஆவது 4ஆவது பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து விடுகிறார். கோடாங்கி குறி சொல்லியதால் 5 ஆவது குழந்தை ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவரது மனைவி மீண்டும் கற்பமாக இருக்கிறார் என்று மிக சாதாரணமாக சூசை வாத்தியாரிடம் சொல்வதில் நம்மை பதற வைத்து படம் ஆரம்பிக்கும்.
ஆனால் மீண்டும் 5 ஆவது குழந்தையும் பெண் குழந்தைகயாகவே பிறக்க அதையும் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்ய சொல்கிறார் மொக்கை. ஆயா தன் வீட்டில் வைத்து குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுக்க போகும் போது குழந்தை இல்லாத வாத்தியார் வந்து அந்த குழந்தையை தன்னிடம் கொடுத்து விடும் படி மன்றாடுவார். குழந்தையை வாங்கி கொண்டு ஊரை விட்டே சென்று விடுவார்.
சில நாட்களில் மனைவி இறந்த பின் மொக்கையன் தன் 2 மகள்களுடன் வாழ்வார். பருவ வயது வந்த உடன் தனது மூத்த மகளை தங்கையின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்.
இதற்கிடையில் கால்நடை மருத்துவராக வரும் டாக்டருக்கும் மொக்கையனின் இரண்டாவது மகள் கருத்தம்மாவும் இடையே காதல் ஏற்படும். அப்போது கருத்தம்மாவின் அக்காவான பொன்னாத்தாவிற்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்திருக்கும். அந்த குழந்தையை கணவனும், மாமியாரும் கொலை செய்ய முயலும் போது தடுக்க வந்த பொன்னாத்தாவை அடித்து கொலை செய்து விடுவார்கள் நெல் மணியை போட்டு குழந்தையையும் கொலை செய்து விடுவார்கள்.
பெண் குழந்தை பிறந்ததால் அவள் தற்கொலை செய்து கொண்டதாக கணவனும் மாமியாரும் சொல்ல தனது அக்கா தற்கொலை செய்யவில்லை என கருத்தம்மா போராடுவாள். இதற்கிடையில் டாக்டர் ஸ்டீபனின் மாமா மகள் ரோசி அந்த கிராமத்திற்கு வருவாள். ஸ்டீபனை ஒரு தலை பட்சமாக அவள் விரும்புவாள். ஆனால் ஸ்டீபன் கருத்தம்மாவை விரும்புவது அவளுக்கு தெரியவரும்.
இதற்கிடையில் மொக்கையனின் குழந்தையை கொலை செய்த அதே ஆயா இப்போது வேறு ஒரு குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்ய முயல்வதை பார்த்த ரோஸி அதை கடுமையாக எதிர்ப்பாள். ஒரு கட்டத்தில் பொன்னாத்தாவின் கணவன் கருத்தம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து தர கேட்பான். கடைசியாக மொக்கையன் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடக்கும் போது ரோஸி மருத்துவம் பார்ப்பாள். ரோஸி தன் மகள் என்பது அவனுக்கு எப்படி தெரியவரும். கடைசியில் கருத்தம்மாவிற்கு யாரை திருமணம் செய்தாள். தன் அக்கா கணவனிடம் இருந்து எப்படி தப்பித்தாள் என்பதே கிளைமேக்ஸ்.
ஆனால் கிளைமேக்சை பார்த்து விட்டு கடந்து போகும் வழக்கமான திரைப்படம் போல் கடந்து போக கூடியதில்லை கருத்தம்மா. தென்மாவட்ட பெண் குழந்தைகளின் மரணத்தின் பிரதிநிதியாக, சாட்சியாக.. ஆம் இன்றைக்கும் இருக்கும் படம் கருத்தம்மா. கலை என்பது சமகால வாழ்க்கைமுறை , மக்களின் பாடுகள், குறிப்பாக சமூக அவலங்களின் பிரதிபலிப்பு என்பதற்கு கருத்தம்மா ஒரு சாட்சி.
ஆராரோ ஆரிராரோ என்ற அந்த பாடல் வரிகள்... மனதிற்கு இதம் தருவதற்கு பதில் நெஞ்சை பிசைகிற ஒரு உணர்வை தான் இன்றைக்கும் கொடுக்கிறது. நம்மையும் அறியாமல் சமூக அவலங்களால் உயிரிழந்த குழந்தைகளுக்கு அந்த நொடிகளில் அஞ்சலி செலுத்த அல்ல.. மன்னிப்பு கேட்க துடிக்கும் மனது. இந்த சமூகத்தில் பெண்களும் கொஞ்சம் வாழ்ந்துட்டுதா சாகட்டுமே. அதில் இங்கிருப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்ற யோசனையை தூண்டும் படம்.
கிராம வாழ்க்கையில் பெண் குழந்தை கருவில் இருந்தே படும் பாடு, தவறி பிறந்த பின் வளர, வாழ நடக்கும் போராட்டம் என அத்தனையும் உணர வைக்கும் கதை களம். உறவுகளுக்குள்ளான பிணைப்பு அன்பு,காதல், குரூரம், ஏளனம் அலட்சியம் அக்கறை, அக்கா தங்கை உறவு, தைரியம், பழிவாங்கல் பாலியல் வக்கிரம் என்று வாழ்வியல் எதார்த்தம் அத்தனையையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை மெனக்கெடல் இல்லாமல் வாழ வைத்திருப்பார் பாரதி ராஜா.
இது எல்லாத்தயும் ஒரு படம் சொல்லும் என்பதில் வியப்பில்லை.. ஆனால் மையக்கருவான பெண்சிசு கொலையை உக்கிரமாக ஓங்கி ஒலித்த வண்ணமே சொன்னதுதான் அங்கே அத்தனை இயல்பு.
ஒரு ஆண்மகன பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கு வந்திருக்கு நான் பெத்த மகளே.. ஒரு பொட்டச்சிய பெத்ததனால் கையொடிஞ்ச என் பொழப்பு கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே .. என்ற வரிகளில் காட்சியமைப்பு வெறும் வர்ணனை அல்ல. இன்றளவும் தமிழ்ச்சூழலின் வாழ்வியல் எதார்த்தம் .
காதல் என்றால் இப்படி இருக்குமா என்று யோசிக்க வைத்திருப்பர் கருத்தம்மாவும் டாக்டரும். கிராம வாழ்க்கையில் பெண்ணின் பொருளாதார சுதந்திரத்தின் தேவை எத்தனை முக்கியம் என போகிற போக்கில் அழுத்தமாக சொன்ன பாங்கு.. கிராமத்தை புதிதாக பார்க்க வரும் பெண் மருத்துவரின் வழியாக கிராமத்தின் வாழ்வியல் குறித்து பாடமே எடுத்திருந்தார் பாரதிராஜா. இத்தனையும் சொன்ன பிறகு ஆராரோ நீ கேக்க ஆயுசுனக்கில்லயடி.. வித நெல்ல நானளிக்க வீதி வந்து சேந்தடி. தாய்ப்பால நீ குடிக்க தலையெழுத்து இல்லயடி.. கள்ளிப்பால நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லபடி என்ற பாடலின் வரிகள் அன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் ஒட்டு மொத்த வாழ்க்கை பாட்டின் ரத்தமும் சதையுமான சாட்சி என்றால் மிகையல்ல.
பொதுவாக கிராமத்தின் வாழ்வியலை நம் கண் முன் காட்டுவதில் கைதேர்ந்தவர் பாரதிராஜா. ஆனால் இவரின் கருத்தம்மாவோ சமூகத்தின் மனசாட்சி மீது காரி உமிழ்ந்த படைப்பு
வாழ்வில் பெண் சாதிக்க மட்டும் அல்ல அவள் பெண்ணாக வாழ்வதே போராட்டம் தான். அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆணாக நீ பொறந்தா பூமியில் இடம் கிடைக்கு போய்வாடி அன்னக்கிளி என்று ஆணாதிக்கத்தின் உச்சத்தை பெண் குரலில் வழியே கடத்திடும் பாங்கு எதார்த்தத்தை காட்டும்.
ஆடு, மாடு, கோழி, மரம், செடி என்ற இயற்கையோடு அத்தனை இயல்பில் பிரிய இயலாது தவிக்கும் கருத்தம்மா மரத்தைவெட்டுவதை தடுக்க போராடிய மகள்.. குடும்ப சூழலால் மனம் விரும்பிய காதலை கைவிட்டு அமைதியாக பொலபொலவென கண்ணீர் விட்டு செல்லும் அந்த காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் கலங்க வைத்தது.
கடைசியில் யாரு பெத்த பிள்ளயின்னு ஊர் முழுக்க பேச்சிருக்க நீ பெத்த பிள்ளயின்னு நெஞ்சுக்குழி சொல்லலயா என்று பெண்ணின் அவசியத்தையும் அவள் வாழ்வில் கல்வியின் தேவையையும் ஒரு சேர படமாக்கிய தெளிவு.
வரதட்சணை உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள் பெண்ணின் வாழ்க்கைக்கு எத்தனை பெரிய சவால் என்றும் கணவன் மனைவி வாழ்க்கையில் பெண்களின் ஆளுமையையும், அவள் மீதான அடக்குமுறையையும் ஒரு சேர சொன்ன விதம்.. சமூகத்தின் பிரதிபலிப்பு. மூளி என்ற ஒற்றை சொல் சொல்லும் கைம் பெண்ணின் அவலத்தை. கடைசியில் சமூகத்தின் அழுத்தம் தந்த வெறியில் கொலை. பின் தண்டனை என வாழ்வின் பரிமாணத்தயும் போராட்டத்தையும் காட்டியிருப்பார் பாரதிராஜா.
கேட்டவுடன் பொம்மை, பென்சில், பேனா, ஆடை என அத்தனையும் வாங்கிக் கொடுக்கும் அப்பாக்களிடம் வளரும் இன்றைய தலைமுறையை சேர்ந்த ஒட்டு மொத்த குழந்தைகளுக்கும் இந்த சமூகம் கடந்து வந்த பாதையை சொல்லித்தரக் கூடியது இந்த படைப்பு.
சமூகம் இப்ப அப்படியா இருக்கு என்று கேட்டால் ஆம்.. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை உசிலம்பட்டி சுற்று வட்டார பகுதியில் பெண்சிசு கொலை வழக்கு பதிவாகி உள்ளது. அந்த வகையில் ஸ்கேன் சென்டர்களில் இங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவிக்கப்பட மாட்டது என்ற அறிவிப்பு பலகை தொங்கும் காலம் வரை கருத்தம்மா இந்த சமூகத்தில் தன் பிறப்புரிமைக்காய் போராடுவாள்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்