நெசமாத்தான் சொல்றியா ?" பலரது ஃபேவரட் திரைப்படமான 'கற்றது தமிழ்' வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு !
கற்றது தமிழ் திரைப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் ஆகியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.
ஒரு கலையானது ரசிகர்களால் கொண்டாடப்படும் போது மட்டுமே அதன் படைப்பின் நோக்கத்தை அடைகிறது. ஆனால் சில கலைகள் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படாமல் போய் விடுகின்றன. இதன் காரணத்தால் பல திறமை மிக்க கலைஞர்கள் காணாமல் போய் விடுகின்றனர். அது திரைப்படங்களுக்கும் பொருந்தும். அந்த வரிசையில் அன்பே சிவம், ஆயிரத்தில் ஒருவன், பூ போன்ற திரைப்படங்கள் அடங்கும். அதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய படம் தான் இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வெளி வந்த ‘கற்றது தமிழ்’திரைப்படம். கற்றது தமிழ் திரைப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் ஆகியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் ராம்
இயக்குநர் ராமின் முதல் திரைப்படம் கற்றது தமிழ். தமிழ் M.A என்பதே இந்தப் படத்தின் முதல் தலைப்பாக இருந்தது. தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்ற விதியினால் இந்த படத்தின் தலைப்பு பின்னர் மாற்றப்பட்டது. இயக்குனர் ராமுக்கு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் அவர்களுக்கும் நடிகை அஞ்சலி அவர்களுக்கும் இதுவே முதல் படம். இதனை அடுத்து வந்த ராமின் அனைத்து படங்களும் மனித உணர்வுகளை ஆழமாக பேசி உள்ளன.
ஜீவா & அஞ்சலி
படத்தின் நாயகன் பிரபாகரனாக ஜீவா - அந்த காலகட்டத்தில் தேர்வு செய்து நடித்த மிக நேர்த்தியான படங்களான ராம், ஈ போன்ற படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.
ஒவ்வொரு தடவையும் பிரபாகரன் ஏதேனும் சொல்லும்போது "நிஜமாதான் சொல்றியா ?" என்று சந்தோஷமாகவும் அழுகையுடனும் உணர்வுப் பூர்வமாகவும் கேட்கும் ஆனந்தியாக அஞ்சலி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர்கள் இருவரைத் தவிர வேறு யார் நடித்து இருந்தாலும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தாது என்ற அளவிற்கு இவர்களின் நடிப்பு இருந்தது.
யுவன் - நா.முத்துக் குமார் கூட்டணி
"உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது" பாடலும் "பறவையே எங்கே இருக்கிறாய்" பாடலும் நம்மை உருக வைக்கும். படத்தின் கதை சூழலுக்கு ஏற்ப நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் கச்சிதமாக ஒட்டிக்கொள்ளும்.
வசனங்கள் வாயிலாக
ஐடி துறையின் ஆதிக்கத்தால் சென்னை நகரில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தை எடுத்துரைக்க "உடம்புல குறிப்பிட்ட பகுதி மட்டும் வளரதுக்கு பேரு வளர்ச்சி அல்ல ! வீக்கம் !! " என்னும் வசனமாக இருக்கட்டும் " இந்த ஊரு ரெண்டு லட்சம் ரூபா சம்பளம் வாங்குறவனக்கும் மூணு லட்ச ரூபா சம்பளம் வாங்குற உனக்கு ஏத்த மாதிரி மாறிக்கிட்டு இருக்கு சார் " என்னும் வசனங்களில் இருக்கும் உண்மையும் இன்றளவும் பொருந்துகிறது.
கதை
சிறு வயதிலேயே தாயை இழந்த பிரபாகரன், அவன் வாழ்நாளை கழிக்கும் மொத்த பயணமும் தான் இந்த கதை. சிறு வயது தோழி ஆனந்தி உடனான காதல், அவளை தேடிய பயணம், தமிழ் ஆசிரியராக பணியாற்றி அதனால் ஏற்படும் விரக்தி என படம் விரிகிறது. மேலும் படம் நெடுக அவர் சந்திக்கும் மனிதர்கள் வாயிலாகவும், நிகழ்வுகள் வாயிலாகவும் அவரது நிலைக்கு இந்த சமூகமே காரணம் என கூற முற்படுகிறார். அவர் அடைந்த மனப்பிறழ்வில் அவர் செய்யும் கொலைகளை நியாயப் படுத்த முயல்வார் . இறுதியில் ஏதோ ஒரு பெண்ணை காப்பாற்ற சென்று அது தன் காதலி ஆனந்தி என்று தெரிந்து ஆனந்தம் அடையும் காட்சி, இறுதியில் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி என காண்பவர் நெஞ்சத்தை இப்படம் கனமான உணர்வுக்கு எடுத்துச் செல்கிறது.
இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் தோன்றியிருப்பர் என்பது கூடுதல் தகவல்.
டாபிக்ஸ்