தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Elections 2024: ‘2ஆம் கட்ட லோக்சபா தேர்தல்! 5 மணி வரை 60% வாக்குகள் பதிவு!’

Lok Sabha elections 2024: ‘2ஆம் கட்ட லோக்சபா தேர்தல்! 5 மணி வரை 60% வாக்குகள் பதிவு!’

Kathiravan V HT Tamil
Apr 26, 2024 08:07 PM IST

”மக்களவைத் தேர்தலின் 2ஆம் கட்டத் தேர்தலில் திரிபுராவில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன”

2வது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, அசாமின் தர்ராங் மாவட்டத்தில் உள்ள கஷ்பரியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்கள் (ANI Photo)
2வது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, அசாமின் தர்ராங் மாவட்டத்தில் உள்ள கஷ்பரியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்கள் (ANI Photo)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தத் தேர்தலில் திரிபுராவின் ஒரே தொகுதியில் அதிகபட்சமாக 77.93% வாக்குகள் பதிவாகி உள்ளன, அதைத் தொடர்ந்து சத்தீஸ்கரின் மூன்று தொகுதிகளில் 72.13% மற்றும் மேற்கு வங்கத்தின் மூன்று தொகுதிகளில் 71.84% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

மணிப்பூரில் உள்ள பதின்மூன்று வாக்குச் சாவடிகளில் 76.06% வாக்குகள் பதிவாகி உள்ளன, அதே நேரத்தில் அசாமில் மாலை 5 மணி வரை 70.66% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 53.51% வாக்குகள் பதிவாகி இருந்தன. 

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அது உத்தரபிரதேசத்திற்கு சற்று மேலே 53.03% ஆக இருந்தது. கிஷன்கஞ்சில் 56.12%, கதிகாரில் 55.54%, பூர்னியாவில் 55.14%, பாகல்பூரில் 47.26% மற்றும் பாங்காவில் 49.50% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

உத்தரப் பிரதேசத்தின் 8 மக்களவைத் தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி 52.74% வாக்குகள் பதிவாகி உள்ளன. அம்ரோஹாவில் மாலை 5 மணி வரை 61.89%, மீரட்டில் 55.49%, பாக்பத்தில் 52.74%, காஜியாபாத்தில் 48.21%, கௌதம் புத்த நகரில் 51.66%, புலந்த்ஷாரில் 54.36% அலிகாரில் % மற்றும் மதுராவில் 46.96%. வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் மாலை 5 மணி வரை சராசரியாக 59.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும், வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. 

பார்மர்-ஜெய்சால்மர் மற்றும் பன்ஸ்வாரா-துங்கர்பூரில் அதிக வாக்குகள் பதிவாகின. தோராயமாக 2.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவை விட ஒட்டுமொத்த வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 6 தொகுதிகளில் குறைந்தது 54.83% வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை 5 மணி நிலவரப்படி, ஹோஷங்காபாத்தில் 63.44% வாக்குகள் பதிவாகி உள்ளன, அதைத் தொடர்ந்து திகம்கர் 57.19%, சட்னாவில் 57.18%, டாமோவில் 53.66%, கஜுராஹோவில் 52.91% மற்றும் ரேவாவில் 45.02% வாக்குகள் பதிவாகி உள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் கூறி உள்ளனர். 

கர்நாடகாவின் பதினான்கு மக்களவைத் தொகுதிகளுக்கு மாலை 5 மணி நிலவரப்படி 63.9% வாக்குகள் பதிவாகி இருந்தன. மாண்டியாவில் அதிகபட்சமாக 74.87% வாக்குகளும், குறைந்தபட்சமாக பெங்களூர் சென்ட்ரலில் 48.16% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது, மாநிலத்தில் தற்காலிக வாக்குப்பதிவு 67.27 சதவீதத்தை தாண்டி உள்ளது. வாக்குப்பதிவுக்கான உத்தியோகபூர்வ நேரம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தாலும், மாநிலம் முழுவதும் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே பெரிய வரிசைகள் காணப்பட்டன. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் கேரளாவில் 77.84% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

WhatsApp channel