தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘இழந்த கோட்டையை மீண்டும் பிடிக்குமா அதிமுக! திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் இதோ!’

HT MP Story: ‘இழந்த கோட்டையை மீண்டும் பிடிக்குமா அதிமுக! திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் இதோ!’

Kathiravan V HT Tamil
Mar 19, 2024 06:30 AM IST

”திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை அதிகபட்சமாக 4 முறை அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசனும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன் 3 முறையும், திமுக மற்றும் அதிமுக சார்பில் மாயத் தேவர் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.”

திண்டுக்கல் மக்களவை தொகுதி வரலாறு
திண்டுக்கல் மக்களவை தொகுதி வரலாறு

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி!

2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவை தொகுதியாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. 

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 

திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 7 முறையும், தமிழ்மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. 

இத்தொகுதியில் அதிகபட்சமாக 4 முறை அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசனும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன் 3 முறையும், திமுக மற்றும் அதிமுக சார்பில் மாயத் தேவர் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 

1973ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுகவுக்கு வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றுத் தந்த தொகுதியாக திண்டுக்கல் உள்ளது. 

வெற்றிக் கொடி நாட்டிய திமுக! 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி 7,46,523 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவால் வெறும் 2,07,551 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட ஜோதி முருகன் 62,875 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் 54,957 வாக்குகளு, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட சுதாகரன் 38,784 வாக்குகளையும் பெற்றனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி 

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ப. நிரஞ்சனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

உத்தேச வேட்பாளர்கள் யார்?

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருமகன் ஆர்.வி.என்.கண்ணன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக சார்பில் அம்மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர் பெயர் அடிபடுகிறது. 

அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில் திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறபப்டுகிறது. 

WhatsApp channel