Lok Sabha Elections 2024: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: திரிபுராவில் அதிக வாக்குப்பதிவு; உ.பி.யில் குறைந்த வாக்குப்பதிவு
Lok Sabha Elections 2024: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
Lok Sabha Elections 2024: 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 இடங்களை உள்ளடக்கிய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில்(ஏப்ரல் 26), 63.50 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி 63.50 விழுக்காடு வாக்குகள் தோராயமாகப் பதிவாகி இருந்தது. இது அனைத்து வாக்குச் சாவடிகளிலிருந்தும் அறிக்கைகள் பெறப்பட்டு,தொகுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
மேலும், நாடுமுழுவதும் வாக்குப்பதிவு நேரம் முடியும் வரை வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தின் மதுரா, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மற்றும் மகாராஷ்டிராவின் பர்பானியின் சில கிராமங்களில், வாக்காளர்கள் ஆரம்பத்தில் தேர்தலைப் புறக்கணித்தனர். ஆனால் பின்னர் அதிகாரிகளின் வலியுறுத்தலின்பேரில் அவர்கள் வாக்களிக்க ஒப்புக்கொண்டனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 26ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. முதல் கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
கர்நாடகாவில் 28 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றும் மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 1 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக 10 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- ஏப்ரல் 26ல் வாக்குப்பதிவின் முடிவில், வாக்காளர் வாக்குப்பதிவு சுமார் 63 சதவீதமாக இருந்தது. இது கடந்த வாரம் முதல் கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 65 சதவீதத்திலிருந்தும், 2019ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டத்தில் பதிவான 68 சதவீதத்திலிருந்தும் குறைவாகும்.
- அதிகபட்சமாக திரிபுராவில் 79.46 சதவீத வாக்குகளும், மணிப்பூரில் 77.32 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 54.85 சதவீதமும், பீகாரில் 55.08 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. திரிபுரா கிழக்கு (எஸ்டி) தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இரண்டு வாக்குச்சாவடிகளில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் கடமை சான்றிதழ்கள் (இடிசி) பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என்று திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி ஏப்ரல் 26ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- மணிப்பூரில் வாக்குப்பதிவின்போது, பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், 77.32 சதவீத வாக்குகள் பதிவாகின.
- உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இதே தொகுதிகளில் பதிவான 62 சதவீத வாக்குகளை விட 7 சதவீதம் வாக்குகள் இம்முறை குறைவாகப் பதிவாகியுள்ளன.
- கேரளாவில் 70.21 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவைத் தொகுதியில் 72.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- மத்தியப் பிரதேசத்தில் 57.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
- அசாமின் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் 77,26,668 வாக்காளர்களில் சுமார் 71.11 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
- மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளில் 57.83 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் 64.07 சதவீத வாக்குகளும் பதிவாகின.
- பீகாரில் 55.08 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 71.91 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் 71.84 சதவீத வாக்குகளும் பதிவாகின. மேற்கு வங்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கிட்டத்தட்ட 300 புகார்கள் வந்தன.
- உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத்த நகர் தொகுதியில் 53.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பீட்டளவில், 2019 மக்களவைத் தேர்தலில் 60.47 சதவீதமும், 2014 -ல் 60.38 சதவீதமும், 2009-ல் 48 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வாக்களிக்கவில்லை. நகருக்குள் பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு வடக்கு மற்றும் பெங்களூரு தெற்கு ஆகிய மூன்று நகர்ப்புற தொகுதிகளில் வாக்காளரின் பங்கேற்பு குறைவாக இருந்தது. இந்த தொகுதிகளில் பெங்களூரு மத்திய தொகுதியில் 52.81 சதவீதமும், பெங்களூரு வடக்கு தொகுதியில் 54.42 சதவீதமும், பெங்களூரு தெற்கில் 53.15 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
டாபிக்ஸ்