தமிழ் செய்திகள்  /  Elections  /  Finance Minister Nirmala Sitharaman Likely To Contest From Puducherry Constituency In Parliamentary Elections

Loksabha Election 2024: ’புதுச்சேரி நிர்மலா சீதாராமன் போட்டியா?’ வெளியான பரபரப்பு தகவல்கள்!

Kathiravan V HT Tamil
Mar 04, 2024 05:49 PM IST

”முன்னதாக புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுவார் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் போட்டியிடவில்லை என்பது உறுதி ஆகி உள்ளது”

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Shrikant Singh)

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில தினங்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக ஏற்கெனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாஜக போட்டியிடும் என என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ரங்கசாமி அறிவித்தார்

இந்த நிலையில் புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்து, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி உடன் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி  உடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில்,  புதுச்சேரி மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக 3 பேர் பெயர் அக்கட்சி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதில் 2 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்,  ஒருவர் நிர்மலா சீதாராமன் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் முதல் பெயராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் அடிபடுகிறது. 

புதுச்சேரியில் வெளியூரை சேர்ந்தவர் போட்டியிட்டால் மக்கள் ஆதரவு இருக்குமா? என்பது குறித்து பாஜக தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூரை சேர்ந்த பாஜகவினர் போட்டியிட கோரிக்கை முன் வைக்கப்பட்டது.  இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அதில் அவர் ஆர்வம் காட்டாததால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்த விவரம் அக்கட்சி வெளியிட உள்ள இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுவார் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் போட்டியிடவில்லை என்பது உறுதி ஆகி உள்ளது. 

WhatsApp channel