By Election 2024: விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் எப்போது தெரியுமா? - அறிவித்த தலைமைத்தேர்தல் ஆணையர்!-chief election commissioner rajeev kumar announced the date of the by polls in vilavancode - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  By Election 2024: விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் எப்போது தெரியுமா? - அறிவித்த தலைமைத்தேர்தல் ஆணையர்!

By Election 2024: விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் எப்போது தெரியுமா? - அறிவித்த தலைமைத்தேர்தல் ஆணையர்!

Marimuthu M HT Tamil
Mar 16, 2024 04:38 PM IST

By Election 2024: தமிழ்நாட்டில் காலியாகவுள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

விளவங்கோடு இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
விளவங்கோடு இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

நடப்பு மக்களவையின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. அதன் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனிடையே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி வெளியிட்ட பதிவில், ‘’மக்களவை மற்றும் சில மாநிலங்களுடைய சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் 16ஆம் தேதியான இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். அதனையொட்டிய செய்தியாளர் சந்திப்பு நாட்டின் தலைநகர் டெல்லியில் விக்யானில் நடக்க இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியத் தேர்தல் ஆணையர்களாக கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாபைச் சார்ந்த சுக்பிர் சிங் சந்துவும் மார்ச் 15ஆம் தேதி பதவியேற்ற நிலையில், மார்ச் 16ஆம் தேதியான இன்று அதற்கான அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பினை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல், இந்த முறை ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலத்திற்கு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த நான்கு மாநிலங்களுக்கும் தேர்தல் நடக்கயிருக்கிறது.

அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ‘’2024ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. தேசத்திற்கு உண்மையான பண்டிகை தேர்தல். ஜனநாயக சூழலை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 17வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16, 2024 அன்று முடிவடைகிறது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2024ல் முடிவடைகிறது. ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தயாராகி விட்டது. நாடுமுழுவதும் 96.8 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். 1.82 கோடி புத்தம்புது வாக்காளர்கள், இந்த முறை வாக்களிக்கவுள்ளனர். ஆண்வாக்களர்கள் 49.7 கோடி பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 41.1 கோடி பேர் உள்ளனர். மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48ஆயிரத்து 44 பேர் உள்ளனர். 85 வயதைக் கடந்த வாக்காளர்கள் 82 லட்சம் பேர் உள்ளனர். 20 முதல் 29 வயதுடையவர்கள் 19.74 கோடி பேர் உள்ளனர். 100 வயதைக் கடந்தவர்கள் 2.18 லட்சம் மூத்த வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம்பேர் உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம். தமிழ்நாட்டில் மட்டும் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்காக 1.50 கோடி பேர் தேர்தல் பணியாற்றுகின்றனர். நம்மிடம் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. 4 லட்சம் வாகனங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்து மூலைகளிலும் ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதில் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்படும்.

மது, பணவிநியோகம், பொருள் விநியோகம், வாக்களிக்க வலியுறுத்தி வன்முறை என எந்தவொரு இடையூறு இருந்தாலும் தேர்தல் ஆணையம் தடுக்கும். வருமானவரித்துறை, விமானத்துறை, போக்குவரத்துத்துறை, ராணுவத்துறை, மாநில காவல் துறை ஆகிய அனைத்துத்துறைகளும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்யும். தேர்தல் அறிவிப்பினை ஒட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். வதந்தி பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. வங்கிகள் மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம்களில் பணத்தை நிரப்பக் கூடாது. 

18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதற்கட்டத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும் நடக்கிறது. ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதியும் நடக்கயிருக்கிறது.

அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத்தொகுதிக்கு உட்பட்ட முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது’’ என்றார். 

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.