Yashasvi Jaiswal: முதலில் சிக்ஸர், அப்புறம் பவுண்டரியுடன் முதல் இரட்டை சதம்! முத்த மழை பொழிந்த ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை எந்த சிரமமும் இன்றி எதிர்கொண்டு ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஜெய்ஸ்வால். அவருக்கான இங்கிலாந்து பவுலர்களின் பொறிகள் அனைத்தும் பவுண்டரி, சிக்ஸர்களாகவே மாறியுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருந்தது.
ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஜெயஸ்வால் நிலையாக பேட் செய்து 179 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் அஸ்வின் 5 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து பவுலர்களில் அறிமுக வீரரான சோயிப் பசீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைபற்றினர். ஆண்டர்சன், ஹார்ட்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்திருந்தனர்.
இதைதத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது. ஜெய்ஸ்வால் - அஸ்வின் சுமார் 10 ஓவர் வரை நிதானமாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக பேட் செய்து வந்த அஸ்வின் 20 ரன்கள் எடுத்த நிலையில், ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது ஜெய்ஸ்வால் 191 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
அஸ்வின் அவுட்டான அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் ஜெய்ஸ்வால். 200 ரன்கள் அடித்த அவர் பேட்டையும், ஹெல்மெட்டையும் கீழே வைத்துவிட்டு ரசிகர்கள் அமர்ந்திருக்கும் ஸ்டாண்ட்ஸை நோக்கி முத்த மழை பொழிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி ஆகியோருக்கு அடுத்தபடியாக இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெயஸ்வால். முதல் நாள் முதல் செஷனில் இருந்தே இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எந்த சிரமமும் இன்றி விளையாடி வந்தார் ஜெயஸ்வால்.
இந்திய இன்னிங்ஸில் ஜெயஸ்வால் அதிகபட்ச ஸ்கோர் அடித்திருக்கும் நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால், ஆட்டத்தின் 106.5வது ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தில் பேர்ஸ்டோவிடம் பிடிபட்டார்.
290 பந்துகளில் 209 ரன்கள் அடித்திருக்கும் ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸில் 19 பவுண்டரி, 7 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். ஜெய்ஸ்வால் அவுட்டானபோது இந்திய அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 383 என இருந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்