WPL 2024: மற்றொரு Last Ball பினிஷ்! பவுலிங்கில் யுபி வாரியர்ஸை கட்டுப்படுத்திய ஆர்சிபி மகளிர் சூப்பர் வெற்றி
பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காதபோதிலும், பவுலிங்கில் கலக்கிய ஆர்சிபி மகளிர் அணி கடைசி பந்தில் வெற்றியை தன் வசமாக்கியது.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரினன் இரண்டாவது போட்டியில் ஆர்சிபி மகளிர் - யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகள் மோதின. பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்டார் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிச்சா கோஷ் அதிரடியாக பேட் செய்து 37 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக சப்பினேனி மேகனா 53 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் பெரிதாக பங்களிப்பு அளிக்கவில்லை.
யுபி வாரியர்ஸ் பவுலிங்கில் ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். கிரேஸ் ஹாரிஸ், தகிலா மெக்ராத், சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
யுபி சேஸிங்
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய யுபி வார்யர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து, 2 ரன்களில் தோல்வியை தழுவியது.
யுபி அணியில் கிரேஸ் ஹாரிஸ் 38, ஸ்வேதா செஹ்ராவத் 31, தகிலா மெக்ராத் 22 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யுபி வாரியர்ஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் - டெல்லி கேபிடல்ஸ் மகளிர் போல் இந்த போட்டியிலும் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் தான் யுபி வாரியர்ஸ் எடுத்தது.
யுபி வாரியர்ஸ் பேட்டிங் ஆர்டரை நிலைகுலைய செய்யும் விதமாக ஆர்சிபி மகளிர் அணி பவுலர் ஷோபனா ஆஷா பந்து வீசினார். 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறப்பான பவுலிங் மூலம் அணியை வெற்றி பெற செய்த ஆஷா, ஆட்டநாயகி விருதை வென்றார்.
ஆர்சிபி மகளிர் அணி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியுள்ளது. நாளை நடைபெற இருக்கும் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாபிக்ஸ்