WPL 2024: "ஓபனிங் நல்லா இருந்தது, பினிஷிங் சரியில்லையேப்பா"! 2 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பு - ஆர்சிபியின் மோசமான ஆட்டம்
டெல்லி கேபிடல்ஸ்க்கு எதிரான சேஸிங்கில் சிறப்பான தொடக்கத்தை தந்த ஆர்சிபி கடைசி 2 ஓவரில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து கைமேல் இருந்த போட்டியை கோட்டை விட்டது.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 7வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மகளிர் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
டெல்லி அதிரடி பேட்டிங்
இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓபனிங் பேட்டரான இளம் இந்திய வீராங்கனை ஷெபாலி வர்மா அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானர்.
இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பேட்டராக களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸியம் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டு 46 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் ஆர்சிபி பவுலர்களுக்கு எதிராக மிரட்டல் அடி அடித்தனர். மாறி மாறி பவுண்டரி சிக்ஸர்கள் என ரன்வேட்டையில் ஈடுபட்டனர். இவர்களின் ஆட்டத்தால் டெல்லி அணி கடைசி 5 ஓவரில் 70 ரன்கள் அடித்தது.
ஆர்சிபி பவுலர்களில் சோஃபி டெவின், நாடின் டி கிளர்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆர்சிபி பதிலடி
195 ரன்கள் என மிகப் பெரிய இலக்கை விரட்டிய ஆர்சிபி அணிக்கு அணியின் கேப்டனும், ஓபனிங் பேட்டருமான ஸ்மிருதி மந்தனா நல்ல தொடக்கத்தை தந்தார். மற்றொரு ஓபனரான சோபி டெவின் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து வந்த மந்தனா அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், 43 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இவருக்கு அடுத்தபடியாக பேட் செய்த சப்பினேனி மேகனா 31, ரிச்சா கோஷ் 19 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் அவுட்டாக, அவ்வளவுதான் மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒற்றை இல்லகத்தை பெவிலியன் நோக்கி நடையை கட்டினர்.
மந்தனா இருந்தவரை ஆர்சிபி வசம் இருந்த போட்டி அவர் அவுட்டான பின்பு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லி வசம் மாறியது. கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன.
டெல்லி பவுலர்கள் அசத்தல்
ஆனால் ரன்களை எடுப்பதற்கு பதிலாக விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து ஆர்சிபி தடுமாறியது. இறுதியில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. கைவசம் இருந்த போட்டியை டெல்லி அணிக்கு தாரை வார்த்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்த நிலையில் ஆட்டத்தின் 19வது ஓவரில் 2 விக்கெட்டுகள், கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபிக்கு நெருக்கடி அளித்தனர்.
டெல்லி அணி பவுலர்களின் ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அருந்ததி ரெட்டி, மரிசான் கேப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய மரிசான் கேப் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
புள்ளிப்பட்டியலில் டெல்லி முன்னேற்றம்
டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியை தழுவியுள்ளது. இதில் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது இடத்தில் ஆர்சிபி, மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் உள்ளன.
இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி வெற்றி கணக்கை தொடங்காத அணியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி உள்ளது.
நாளை நடைபெற இருக்கும் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் - யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்