World Cup Cricket 2023: இலங்கையை ஊதித்தள்ளி வென்ற தென்னாப்பிரிக்கா அணி; எய்டன் மார்க்ரம்முக்கு ஆட்டநாயகன் விருது!
World Cup Cricket 2023: இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில், இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, தென்னாப்பிரிக்க அணி
World Cup Cricket 2023: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடத் தொடங்கியது. இந்த ஸ்கோரின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஸ்கோரை பதிவு செய்த அணியானது தென் ஆப்பிரிக்கா. இதற்கு முன் ஆஸ்திரேலியா 2015 உலகக் கோப்பையில் 7 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் எடுத்தது.
அடுத்த இடத்தில் இந்தியா இருந்தது. 2007இல் 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்தது. தற்போது பிற அணிகளை பின்னுக்குத் தள்ளி, தென் ஆப்பிரிக்கா முதலிடத்துக்கு வந்துள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு இப்போட்டி தொடங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் குவின்டன் டி காக், டசன் ஆகியோர் சதம் விளாசினர். அதைத்தொடர்ந்து எய்டன் மார்க்ரம் சதம் விளாசினார். அதிகபட்சமாக இலங்கை பவுலர் தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களைக் குவித்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிஷான்கா ரன் எதுவும் எடுக்காமலும், குஷல் பெரெரா 7 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். இலங்கை வீரர் குஷல் மெண்டிஸ் நிலைத்து நின்று ஆடி 76 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா பந்தில் க்ளெசனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய சமரவிக்ரம 23 ரன்களுடன் அவுட்டானார். பின், இறங்கிய சரித் அஷ்லாங்கா நிலைத்து நின்று ஆடி 65 பந்துகளுக்கு 79 ரன்களை எடுத்தார். இதில் 4 சிக்ஸர்களும் அடக்கம். இருப்பினும், தென்னாப்பிரிக்கவீரர் கிடி பந்துவீச்சில் சப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் ஆடிய இலங்கை கேப்டன் டசன் ஷாங்கா 68 ரன்கள் எடுத்தபோது மஹாராஜின் பந்துவீச்சில் போல்டானார். பின், அடுத்தடுத்து இலங்கை வீரர்கள் சொதப்ப ஆரம்பித்தனர். இறுதியாக 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஏறத்தாழ 102 ரன்கள் பின்தங்கி படுதோல்வியைத் தழுவியது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில், அதிகபட்சமாக ஜெரால்டு காட்ஸி மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
இப்போட்டியில் 54 பந்துகளுக்கு 106 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம்முக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்