World Cup 2023: சென்னை 28 பட Climax போல் சென்னை சேப்பாக்கத்தில் வேற லெவல் த்ரில்லர்!பாகிஸ்தானை வீழ்த்திய தென் ஆப்பரிக்கா
தென் ஆப்பரிக்கா தோல்வி அடைந்த ஒரே போட்டி சேஸிங்கில் தான் அமைந்தது. இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாக இருந்த சென்னை ஆடுகளத்தில் போராடி வெற்றி பெற்றதுடன், 24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 26வது போட்டி பாகிஸ்தான் - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பை தொடரின் கடைசி போட்டி இங்கு நடைபெற்ற நிலையில் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 270 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக செளத் ஷாகில் 52, பாபர் அசாம் 50, ஷதாப் கான் 43 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் இடது கை ஸ்பின்னரான தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டை எடுத்தார்.
முழுமையாக 50 ஓவர்களையும் பேட் செய்யாமல் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 271 ரன்களை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா அணி 47.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பரிக்கா அணியில் ஐடன் மார்க்ரம் 91 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக பங்களிப்பு அளிக்காத நிலையில், 28 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பரிக்கா. அப்போது களத்தில் இருந்த கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் மிகவும் நிதானத்துடன் பேட் செய்து அணிக்கு த்ரில் வெற்றியை பெற்று தந்தனர்.
பாகிஸ்தான் பவுலர்களில் ஷாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஸ் ராஃப், முகமது வாசி, உஸ்மான் மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணியை 1999க்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் தென் ஆப்பரிக்கா வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் உலகக் கோப்பை தொடரின் முதல் கன்கஷன் சப்ஸ்டியூட் வீரராக பாகிஸ்தான் அணியில் உஸ்மான் மிர், ஆட்டத்தின் 18வது ஓவரில் ஷதாப் கானுக்கு பதிலாக களமிறக்கப்பட்டார். இவர் சிறப்பாக பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்