World Cup 2023: 24 ஆண்டு கால தவம்! பாகிஸ்தானை பதம் பார்க்க உச்ச பார்மில் காத்திருக்கும் தென் ஆப்பரிக்கா
PAK vs SA Preview: பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பரிக்கா அணி தான் அதிக முறை வென்றிருந்தாலும், கடைசி வெற்றியானது 1999இல் நடந்துள்ளது. இதன் பின்னர் மோதிய இரண்டு முறையும் தோல்வியை தழுவியுள்ளது. எனவே நல்ல பார்மில் இருக்கும் தென் ஆப்பரிக்கா வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 26வது போட்டி பாகிஸ்தான் - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே சென்னையில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டியானது சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் கடைசி போட்டி இங்கு நடைபெறுவதால் மைதானம் முழுமையாக ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி ஆராவாரத்துக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.
தென்ஆப்பரிக்கா அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6வது இடத்தில் உள்ளது.
உச்சகட்ட பார்மில் இருக்கும் தென் ஆப்பரிக்கா பலம் வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்திய போதிலும் வளர்ந்து வரும் அணியான நெதர்லாந்துக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அத்துடன் தென்ஆப்பரிக்கா வென்று 4 போட்டிகளிலும் அந்த அணி முதலில் பேட் செய்துள்ளது. இதில் சேஸ் செய்த போட்டி தவிர மற்ற போட்டிகளில் 300+ ஸ்கோர் அடித்துள்ளது. இதில் மூன்று முறை 350 ரன்களும் மேலும், இந்த உலகக் கோப்பை போட்டியில் 400 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணியாகவும் தென் ஆப்பரிக்கா உள்ளது.
இதைவைத்து பார்க்கையில் தென் ஆப்பரிக்காவின் பவுலிங்கை விட பேட்டிங் பல மடங்கு வலிமை மிக்கதாக தெரிகிறது. அதுவும் முதல் பேட்டிங்கில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
கடந்த போட்டியை மிஸ் செய்த தென் ஆப்பரிக்கா அணி கேப்டன் பவுமா இன்றைய போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. அதேபோல் வெற்றி கூட்டணியில் பெரிய மாற்றங்களை செய்யாமல் ஆடுகளம், சூழலுக்கு ஏற்ப சரியான மாற்றங்களை செய்து தென் ஆப்பரிக்கா அணி விளையாடி வருகிறது. எனவே அந்த பாணியை பாகிஸ்தானுக்கு எதிராக இன்றும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
பாகிஸ்தானை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் சிறப்பாகவே செயல்பட்டாலும் பீல்டிங்கில் பெரிய அளவில் கோட்டை விடுகிறது. பேட்டிங், பவுலிங்கில் ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொரு அதை சரி செய்து விடும் விதமாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்த அணியின் பீல்டிங் ரன்கள் லீக்காகவும் ஓட்டையாகவே இருந்து வரும் நிலையில் அதை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதை சரியாக செய்தாலே சாதகமான வெற்றி பயணத்தை தொடரலாம்.
போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது போட்டி. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. பவுலிங், பீல்டிங்கில் ஆதிக்கம் செலுத்தாமல் முழுமையாக கோட்டை விட்டதன் விளைவே ஆப்கானிஸ்தான் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைக்க காரணமாக அமைந்தது
பிட்ச் நிலவரம்
சென்னையில் நடைபெற்ற முதல் மூன்று போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு சற்று கடினமாகவும், ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாகவும் பிட்ச் செயல்பட்டது. அத்துடன் பந்து வழக்கத்தை விட மெதுவாக எழும்பி வருவதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்குவிப்பதில் தடுமாறவே செய்தனர்.
ஆனால் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதிய கடைசி போட்டியில் இயல்பு மாறி பவுலர்களுக்கு பெரிதாக உதவாமல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது.
இன்று நடைபெறும் போட்டி வங்கேதசம் - நியூசிலாந்து மோதிய ஆடுகளத்தில் நடைபெறவுள்ளது. இது மற்ற ஆடுகளங்களை காட்டிலும் கொஞ்சம் வேகமாகவும் ரன் குவிப்பதற்கு வசதியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் ரன் வேட்டை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் லேசான சாரல் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் - தென்ஆப்பரிக்கா அணிகள் இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்ஆப்பரிக்கா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடைசியாக 1999இல் தான் பாகிஸ்தான் அணியை தென்ஆப்பரிக்கா வீழ்த்தியுள்ளது. இதன் பின்னர் 2015, 2019 உலகக் கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில், இரண்டு முறையும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
எனவே இரண்டு முறை தொடர் தோல்விகளுக்கு பின்னரும், 24 ஆண்டுகள் கழித்தும் மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வெற்றி பெறுவதற்காக தென்ஆப்பரிக்கா காத்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்