World Cup 2023: 24 ஆண்டு கால தவம் - பழிதீர்த்த தென் ஆப்பரிக்கா! நியூசிலாந்து ஹாட்ரிக் தோல்வி
World Cup 2023, SA vs NZ Result: உலகக் கோப்பை தொடர்களில் ஐந்து முறை நியூசிலாந்திடம் பணிந்த தென் ஆப்பரிக்கா, 24 ஆண்டுகள் கழித்து அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 32வது போட்டி தென் ஆப்பரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனேவிலுள்ள மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாப் லாதம் பவுலிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனுக்கு பதிலாக டிம் செளதி சேர்க்கப்பட்டார். உலகக் கோப்பை 2023 தொடரில் முதல் போட்டியில் செளதி இன்று களமிறங்கியுள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த தென்ஆப்பரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களில் ராஸ்ஸி வான் டெர் டுசென் 133, குவன்டைன் டி காக் 114 ரன்கள் அடித்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
நியூசிலாந்து பவுலர்களில் டிம் செளதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், ஜேமி நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். நியூசிலாந்து அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்பின்னரான சாண்ட்னர் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற சாதனை இலக்கை சேஸ் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியது. ஆனால் தென் ஆப்பரிக்கா பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை தாக்குபிடிக்க முடியாமல் 35.3 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. நியூசிலாந்து பவுலர்களில் கிளென் பிளிப்ஸ் அரைசதமடித்து அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக வில் யங் 33, டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்தனர். இந்த தோல்வியால் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கு சென்றது. தென் ஆப்பரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்ககோ ஜான்சன் 3 , ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ககிசா ரபாடா அற்புதமாக பந்து வீசி 6 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இதனால் தென் ஆப்பரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. முதல் பேட்டிங்கில் சிறப்பாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் தென் ஆப்பரிக்கா, இன்றைய போட்டியில் டாஸில் தோல்வியுற்றாலும் நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட் செய்தது. வழக்கம் போல் பவுலர்களுக்கு எதிராக தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த நான்காவது முறையாக உலகக் கோப்பை 2023 தொடரில் 350+ ஸ்கோரை எடுத்தது.
இரவு நேரத்தில் பனிப்பொலிவு இருக்கும் என கணித்து முதல் பவுலிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது. தென் ஆப்பரிக்கா அணியின் வேகபந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர் ஆகியோரிடம் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது.
1999ஆம் ஆண்டுக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து, 5 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்