World Cup 2023: உலகக் கோப்பை போட்டியில் அதிவேக சதமடித்த மேக்ஸ்வெல்! நெதர்லாந்து பவுலிங்கை பிரித்தெடுத்த ஆஸி.,
இன்றைய போட்டியில் மூன்று சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு சதங்களை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர், க்ளென் மேக்ஸ்வெல் அடித்திருக்கும் நிலையில், மூன்றாவது சதத்தை நெதர்லாந்து ஸ்டிரைக் பவுலரான பாஸ் டி லீட் 115 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான பவுலிங்கை பதிவு செய்துள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24வது போட்டி ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்க்கு பதிலாக பதிலாக கேமரூன் க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து அணி கடந்த போட்டியில் விளையாடி அதே அணியுடன் இன்றும் களமிறங்கியுள்ளது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இரண்டு பேர் இன்றைய போட்டியில் சதமடித்துள்ளனர். அதிரடியில் மிரட்டிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதமடித்து உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதமடித்து சாதனை புரிந்தார். 44 பந்துகளில் 106 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல் கடைசி ஓவரில் அவுட்டானார்.
ஓபனிங் பேட்ஸ்மேன் வார்னர் சதமடித்து 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் 71, லபுஸ்சேன் 62 ரன்களை அடித்துள்ளனர்.
நெதர்லாந்து பவுலர்களில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியில் ஸ்டிரைக் பவுலரான பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் ரன்களை வாரி வழங்கினார். பவுலிங்கில் சதமடித்தார். 10 ஓவரில் 115 ரன்களை விட்டுக்கொடுத்து தனது கேரியரில் மோசமான பவுலிங்கை பதிவு செய்தார்.
நெதர்லாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த 400 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்