World Cup 2023: இலங்கை அணியில் ஐந்து பேர் முட்டை! பவுலிங்கில் தெறிக்கவிட்ட சிராஜ், ஷமி கூட்டணி - இந்தியா சாதனை வெற்றி
World Cup 2023, IND vs SL Result: உலகக் கோப்பை 2023 தொடரில் முகமது ஷமி இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 33வது போட்டி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சுப்மன் கில் 92, விராட் கோலி 88 ரன்கள் எடுத்தனர். இதுவரை பெரிய இன்னிங்ஸ் விளையாடமல் இருந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் அதிரடி காட்டி 56 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அவுட்டனார்.
இலங்கை பவுலர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யாகுமார் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் தூக்கினார்.
உலகக் கோப்பை 2023 தொடரில் இலங்கை அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தி கொள்ள 358 ரன்கள் என்ற சாதனை சேஸிங் செய்ய வேண்டும். இதையடுத்து இலங்கை அணி 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது.
இதன்மூலம் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது
இந்திய பவுலர்களில் முகமது ஷமி 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
இலங்கை தனது இன்னிங்ஸை தொடங்கிய முதல் பந்திலேயே ஓபனிங் பேட்ஸ்மேன் நிஸ்ஸங்கா டக் அவுட்டாகி வெளியேறினார். பும்ரா இவரை எல்பிடபிள்யூ முறையில் தூக்கினார்.
இதன் பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது ஓவர் முதல் பந்திலேயே முகமது சிராஜும் விக்கெட் வீழ்த்தினார். இலங்கையின் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான திமுத் கருணரத்னே முதல் பந்திலேயே டக்அவுட்டாகி வெளியேறினார். இவரும் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அதே ஓவரின் 5வது பந்தில் சமரவிக்ரமாவை டக்அவுட்டாக்கினார் சிராஜ்.
இதனால் 2 ஓவரில் 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை. ஆட்டத்தின் 3.1 ஓவரில் இலங்கை அணி கேப்டன் மெண்டிஸ் ஒரு ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
முதல் நான்கு ஓவரிலேயே 7 ரன்கள் எடுத்த நிலையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்குபேரையும் இழந்து இலங்கை தடுமாறியது. அப்போது களத்தில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ், சரித் அசலங்கா ஆகியோர் விக்கெட் சிரிவை தடுக்கும் விதமாக விளையாடினர்.
ஆட்டத்தின் 9வது ஓவரை, முகமது ஷமி தனது முதல் ஓவராக வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் 24 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்திருந்த அசலங்கா விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் அடுத்த பந்திலேயே ஹேமந்தாவை டக் அவுட்டாக்கி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து ஷமியும் தன் பங்குக்கு இலங்கை பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.
பவர்பளே முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மட்டுமே இலங்கை அணி எடுத்தது. உலகக் கோப்பை பவர்பிளேயில் மிகவும் குறைவான ஸ்கோராக இது அமைந்தது.
இதன்பின்னர் ஆட்டத்தின் 11.3 ஓவரில் சமீராவை டக் அவுட்டாக்கி வெளியேற்றிய ஷமி, 13.1 ஓவரில் நிதானமாக பேட் செய்து வந்த ஒரே பேட்ஸ்மேனான மேத்யூஸ் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரையும் க்ளீன் போல்டாக்கி வெளியேறினார்.
தொடர்ந்து 17வது ஓவர் கடைசி பந்தில் 14 ரன்கள் எடுத்திருந்த ரஜிதா விக்கெட்டை தூக்கிய ஷமி, உலகக் கோப்பை 2023 தொடரில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்.
19.4 ஓவரில் ஜடேஜா வீசிய பந்தில் மதுஷங்கா அவுட்டாக இந்தியா, உலகக் கோப்பை போட்டிகளில் மிகப் பெரிய வெற்றியை ருசித்தது. இது சாதனையாகவும் அமைந்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் இந்தியா, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியதுடன், முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இனி அடுத்து மூன்று இடங்களுக்கு இதர அணிகள் போட்டியிடவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்