World Cup 2023: இனி ஜெயித்தால் மட்டுமே தப்பிக்க முடியும்! கட்டாய வெற்றியை நோக்கிய இங்கிலாந்து - இலங்கை பலப்பரிட்சை
World Cup 2023, ENG vs SRI Preview: இனி வரும் ஒவ்வொரு போட்டிகளும் முக்கியமானது என்பதுடன், ஒரே புள்ளிகளுடன் இருக்கும் இங்கிலாந்து, இலங்கை அணிகள் கட்டாயமாக வெற்றி பெற்று முன்னிலை பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.
உலகக் கோப்பை 2023 தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி சின்னசாமி ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியாக உள்ளது. இரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. இலங்கை அணி ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
இலங்கையை ஒப்பிடுகையில் இங்கிலாந்து பலம் வாய்ந்த அணியாகவும், வீரர்கள் நல்ல பார்மிலும் இருந்து வருகின்றனர். ஆனாலும் இங்கிலாந்து வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
நடப்பு சாம்பியனாக இருந்து கொண்டு உலகக் கோப்பை 2023 தொடரில் முதல் அப்செட்டில் மாட்டிக்கொண்ட அணியாக இங்கிலாந்து உள்ளது. இன்றைய போட்டியுடன் எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.
பேட்டிங்கில் பேர்ஸ்டோ, டேவிட் மாலன், ஜோ ரூட் பார்மில் இருந்தாலும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜோஸ் பட்லர் கவனிக்கத்த வகையில் இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் உள்ளார்.
அதேபோல் பவுலிங்கிலும் மார்க் வுட் தவிர மற்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை தென் ஆப்பரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என வலுவான அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய பின்னர் வளர்ந்து வரும் அணியான நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
தற்போது இலங்கை அணிக்கு மற்றொரு பரிட்சையாக நடப்பு சாம்பியனும், வலுவான அணியுமான இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடர் வேண்டிய நிலை உள்ளது.
இலங்கை அணிக்கு முதல் இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட தசுன் ஷானகா காயத்தால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பின்னர்
கேப்டனாக செயல்பட்டு வரும் குசால் மெண்டிஸ் அணிக்கு முதல் வெற்றியை தேடி தந்துள்ளார். இதை அப்படியே தொடர்வதற்கான திட்டங்களை வகுத்து அனைத்து முயற்சிகளிலும் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கலாம்.
பிட்ச் நிலவரம்
உலகக் கோப்பை 2023 தொடரில் அதிக ஸ்கோர் அடித்த போட்டி நடைபெற்ற மைதானங்களில் ஒன்றாக இருந்து வரும் சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களே இன்றும் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. பிட்ச்சில் உள்ள புற்கள் மீது சிறிய அளவிலான திட்டுக்கள் இருந்தாலும் கடினமானதாக இருக்கும் என்பதால் ஸ்பின்னர்களை காட்டிலும் பகல் நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் எடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் வானில் வறண்டு காணப்படும் எனவும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 6, இலங்கை 5 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த கணக்கில் இங்கிலாந்து முன்னேறுமா அல்லது இலங்கை சமன் செய்யுமா என்பதை பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்