World Cup 2023: கொத்து பரோட்டாவாக ஆக்கப்பட்ட நெதர்லாந்து! உலக கோப்பை வரலாற்றில் மிக பெரிய வெற்றி பெற்று சாதித்த ஆஸி.,
நெதர்லாந்து அணியை கொத்து பரோட்டா போல் கொத்தி எடுத்த ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை புரிந்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24வது போட்டி ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்த நிலையில், நெதர்லாந்து பவுலர்களை பவுண்டரி, சிக்ஸர்கள் என வெளுத்து வாங்கி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது.
கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியில் மிரட்டிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதமடித்து உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதமடித்து சாதனை புரிந்தார். 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் கடைசி ஓவரில் அவுட்டானார்.
ஏற்கனவே ஓபனிங் பேட்ஸ்மேன் வார்னர் சதமடித்து 104 ரன்கள் எடுத்து அவுட்டாகியிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித் 71, லபுஸ்சேன் 62 ரன்களை அடித்திருந்தனர். இவர்களுடன் மேக்ஸ்வெல் அதிரடி ரன் வேட்டையும் சேர்ந்து நெதர்லாந்து அணிக்கு மிகப் பெரிய இலக்கை நிர்ணயம் செய்ய காரணமாக அமைந்தது.
நெதர்லாந்து பவுலர்களில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியில் ஸ்டிரைக் பவுலரான பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், பவுலிங்கில் சதமடித்தார். 10 ஓவரில் 115 ரன்களை விட்டுக்கொடுத்து தனது கேரியரில் மோசமான பவுலிங்கை பதிவு செய்தார்.
இதையடுத்து 400 என்ற இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய நெதர்லாந்து அணி பவுலிங்கை போல் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவிடம் முழுமையாக சரணடைந்தது. ஆஸ்திரேலியா பவுலர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அவுட்டாகி நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர்.
21 ஓவரில் 90 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா பவுலர்களில் ஸ்பின்னராக ஆடம் ஸாம்பா வெறும் 8 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை புரிந்துள்ளது ஆஸ்திரேலியா. ஏற்கனவே இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் அதிவேக உலகக் கோப்பை சதமடித்து சாதித்திருந்தார். இதன்பின்னர் மற்றொரு சாதனையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியா சாதித்துள்ளது.
நெதர்லாந்து அணிக்கு எதுவுமே சரியாக அமையாத நிலையில், ஆஸ்தரிலேயா அணிக்க எல்லாமே சரியாக அமைந்த நாளாக இன்றைய போட்டி அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி ரன்ரேட் விர்ரென உயர்ந்துள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி வரை சென்ற ஆஸ்திரேலியா தற்போது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்