Hardik Pandya: உலகின் பெஸ்ட் பவுலருக்கு ஒரே ஓவர்தானா? “என்ன கோட்டைசாமி இது” - பாண்ட்யா கேப்டன்சியை கிழிக்கும் வீரர்கள்
உலகின் பெஸ்ட் பவுலருக்கு பவர்ப்ளேயில் ஒரே ஓவர் மட்டும் கொடுத்த பாண்ட்யாவின் தந்திரம் வேலைக்கு ஆகாத விஷயமாக உள்ளதாக ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாடியுள்ளார். இவரை போல் ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ப்ரட்லீயும், பாண்ட்யாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்
ஐபிஎல் 2024 தொடரின் 8வது போட்டி சன் ரைசர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ், தனது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியது.
அத்துடன், 277 ரன்களை 20 ஓவரில் குவித்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது சன் ரைசர்ஸ். இந்த ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் மிரட்டினாலும் 246 ரன்கள் அடிக்க 31 ரன்களில் தோல்வியை தழுவியது.
பாண்ட்யா கேப்டன்சி மீது விமர்சனம்
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பவுலிங்கின் போது, பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய விதம் தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ கூறியதாவது: " மும்பை இந்தியன்ஸ் தனது பவுலங் ஆர்டரை தவறாக பயன்படுத்தியது. முதல் ஓவரை ஜஸ்ப்ரீத் பும்ரா வீசியிருக்க வேண்டும். முதல் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்து வீச வந்தபோது எதிரணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அதே நிலைமையில் தான் பவுலிங் செய்ய வந்தார்.
அப்போது ஆட்டத்தை சன் ரைசர்ஸ் ஏற்கனவே நன்கு செட் செய்திருந்தது. கிளாசன் கிளாஸ் ஆன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யார் பவுலிங் செய்தாலும் அந்த பந்து வீச்சாளர் அடித்து நொறுக்கப்பட்டார்" என்றார்
ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: "முதல் இன்னிங்ஸில் மும்பை அணி பந்து வீச்சாளர்களை உபயோகப்படுத்திய விதத்தை கண்டு குழப்பம் அடைந்தேன். பவர்ப்ளேயின் போது பும்ரா நான்காவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் அவர் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த போதிலும், 13வது ஓவர் வரை அவர் பந்து வீச வரவில்லை. அப்போது அணியின் ஸ்கோர் 173 என்று இருந்தது.
மிக பெரிய தவறு
எல்லா சேதமும் அடைந்த பின்னர் அணியின் சிறந்த பவுலரை பந்து வீச அழைத்து விக்கெட் எடுத்து தர வேண்டும் என நினைப்பது நியாயமான விஷயம் இல்லை.
பல விஷயங்கள் தவறாக நடந்திருந்தாலும், பும்ராவை சரியாக பயன்படுத்தாமல் போனது மிக பெரிய தவறான விஷயமாகவே கருதுகிறேன்.
பந்து நாலாபுறம் பறந்து கொண்டிருக்க, அணியின் சிறந்த பவுலரை அந்த நேரத்தில் பந்து வீச அழைத்திருக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்க வேண்டும். பும்ராவை 15 அல்லது 16 ஓவர்களுக்குள் பந்து வீசி முடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சில விக்கெட்டுகள் கிடைக்கவும் வாய்ப்பாக அமைந்திருக்கும். அல்லது ரன் ரேட்டாவது கட்டுக்குள் இருந்திருக்கும்.
உலகின் சிறந்த பவுலரை பவர்ப்ளேயில் ஒரு ஓவர் மட்டும் வீச செய்தது முற்றிலும் தவறு. ஆரம்பத்திலேயே அவர் வீசி இருந்தால் சில ரிஸ்குகள் எடுத்திருப்பார். அணியின் ஸ்கோர் 277 என்பது 240 எனவும் கூட குறைந்திருக்கலாம். அந்த ஸ்கோரை சேஸிங்கும் செய்திருக்கலாம்" என்றார்.
விக்கெட்டுகள் வீழ்த்தாத பும்ரா
மிகவும் சிக்கனமான பவுலராக இருந்து வரும் பும்ரா இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதேசமயம் மற்றொரு டாப் பவுலராக இருந்து வரும் சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்தபோதிலும், 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
மும்பை அணியின் இரண்டு தொடர் தோல்விகளுக்கு பாண்ட்யாவின் கேப்டன்சி, அணுகுமுறை குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.