Rohit Sharma: "டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவை கேப்டனாக பார்க்க விரும்புகிறேன்"-கம்பீர்
டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்வு செய்யப்பட்டால் ரோஹித் தான் கேப்டனாக இருக்க வேண்டும், ஹர்திக் பாண்டியா அல்ல என்று கம்பீர் தெரிவித்தார்.
ரோஹித் சர்மா டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரோஹித் சர்மா கேப்டனாக அந்தத் தொடரில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்வு செய்யப்பட்டால் ரோஹித் தான் கேப்டனாக இருக்க வேண்டும், ஹர்திக் பாண்டியா அல்ல என்றும் கம்பீர் கூறினார்.
"இருவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக, டி20 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவை நான் கேப்டனாகப் பார்க்க விரும்புகிறேன். ஆம், டி20 போட்டிகளில் ஹர்திக் கேப்டனாக இருந்து வருகிறார், ஆனால் நான் இன்னும் ரோஹித்தை கேப்டனாக பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பையில், ரோஹித் ஷர்மாவை பேட்ஸ்மேனாக மட்டும் தேர்வு செய்தால் போதாது. ரோஹித் ஒரு அற்புதமான டீம் லீடர், இந்த ஒருநாள் உலகக் கோப்பையில் தனது தலைமையினாலும் பேட்டிங்கினாலும் தன்னை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார் " என்றார்.
கம்பீர் தவிர, புகழ்பெற்ற பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூட இதே போன்ற எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. ரோஹித், கோலி இருவரையும் நான் தேர்வு செய்வேன். அவர்கள்தான் அணிக்கு முக்கிய வீரர்கள்" என வாசிம் அக்ரம் கூறினார்.
" கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் கவனம் செலுத்தியதால் டி20 போட்டிகளில் ரோஹித் விளையாடவில்லை. இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருடன் அவர் விரிவாக விவாதித்தார். டி20 போட்டிகளில் இருந்து விலகியது, முற்றிலும் ரோஹித்தின் முடிவு" என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நவம்பர் 2022 இல் இந்தியாவின் T20 உலகக் கோப்பை அரையிறுதியில் இருந்து வெளியேறியதிலிருந்து ரோஹித் குறுகிய வடிவத்தில் ஒரு ஆட்டத்தை கூட விளையாடவில்லை, மேலும் ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் T20I களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, அவர் 148 டி20 போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களுடன் கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். இளம் வீரர்கள் செயல்படத் தவறினால், ரோஹித்தின் தற்போதைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்