Virat Kohli: இப்போதைக்கு குட்டி பிரேக்! நானே மீண்டும் வருவேன் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விராட் கோலியின் முடிவு
வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலத்துக்கு பிரேக் எடுக்க விராட் கோலி முடிவு செய்திருக்கும் நிலையில், ரோஹித் ஷர்மா முடிவு பற்றி தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
உலகக் கோப்பை 2023 தொடரை முடித்தவுடனே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கும் மற்ற முக்கிய வீரர்களான கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பின் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்தியா அங்கு டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உள்ளூரில் நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டியிலும் பங்கேற்கிறது.
இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் ஸ்டார் வீரரான விராட் கோலி சிறிது காலம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காலம் வரை வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கான தேர்வில் அவர் இடம்பிடிக்கமாட்டார் என விராட் கோலி தரப்பிலிருந்து பிசிசிஐயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதையே நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனத்தை செலுத்த விராட் கோலி முடிவு செய்திருப்பதாகவும், தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தில் டி20, ஒரு நாள் போட்டிகளை தவித்துவிட்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்திருப்பதாகவும் பிசிசிஐ வட்டார தகவல் தெரிவித்துள்ளன. அத்துடன் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாட தயாரான பின்னர் அதுகுறித்து முறையாக தெரிவிப்பதாகவும் கோலி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே கோலியை இப்போதைக்கு டி20, ஒரு நாள் போட்டிகளில் பார்க்க முடியாது என்பது தெளிவாகியுள்ள நிலையில், ரோஹித் ஷர்மாவின் நிலைப்பாடு குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த அணியின் சீனியர் வீரர்களாக இருந்து வரும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இதையடுத்து அடுத்து ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் வைத்து நடைபெற இருக்கிறது.
இதையடுத்து இவர்கள் இருவரும் கடைசியாக ஐசிசி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பாக இந்த தொடர் அமைகிறது. இந்த தொடருக்கு இன்னும் ஆறு மாதம் காலமே இருந்து வரும் நிலையில், அதை மனதில் வைத்தும் இவர்கள் இருவரும் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வரும் ஜூன் மாதம் வரை இந்தியா 6 டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் முடிந்ததும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடைபெறவுள்ளன. டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் இலங்கை சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட யுகே சென்றுள்ளனர். இதற்கிடையே தென் ஆப்பரிக்கா தொடருக்கு எதிரான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு இந்த வாரம் இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்