தமிழ் செய்திகள்  /  Cricket  /  Virat Kohli Creates Record Becomes First Batsman To Reach 12,000 Runs In T20 Cricket

Virat Kohli Record: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை..! சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கோலி நிகழ்த்திய சாதனைகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 10:00 PM IST

இன்றைய போட்டியில் கோலி நிகழ்த்தக்கூடிய சாதனைகள் பல இருந்த நிலையில், இரண்டு முக்கிய சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் அளித்தார்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பேட்டிங்
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பேட்டிங் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48, தினேஷ் கார்த்திக் 38, டூ பிளெசிஸ் 35, விராட் கோலி 21 ரன்கள் எடுத்தனர்.

சிஎஸ்கே பவுலர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆர்சிபி பேட்டர்களை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.

கோலி சாதனைகள்

இன்றைய போட்டியில் களமிறங்குவதற்கு முன்னரே கோலி இந்த போட்டியில் நிகழ்த்த போகும் சாதனைகள் குறித்து பட்டியல் வெளியானது. அதன்படி இந்த போட்டியில் களமிறங்கியபோதே கோலி தனித்து சாதனை ஒன்றை புரிந்தார்.

அதன்படி, ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது 17வது சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், அத்தனை சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனை புரிந்தார்.

இதன் பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய அவர் 9 ரன்கள் அடித்தபோது, டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த சாதனையை புரிந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 377 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, 12 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதற்கிடையே 6 ரன்கள் அடித்தபோது, ஷிகர் தவானுக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

மிஸ்ஸான சாதனைகள்

இன்றையை போட்டியில் விராட் கோலி சதமடித்திருந்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 10வது சதத்தை அடித்து அதிக அரைசதமடித்த வீரராக கோலி இருந்திருப்பார். அத்துடன் 7 பவுண்டரிகளை அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் 650வது பவுண்டரி என்ற மைல்கல்லை அடைவார் என்று இருந்த நிலையில், கோலி தனது இன்னிங்ஸில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ஒரேயொரு சிக்ஸர் மட்டும் அவர் அடித்தார்.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள்

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சோயிப் மாலிக் 13,360 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், கைரன் பொல்லார்டு 12, 900 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். நான்காவது இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஐந்தாவதாக டேவிட் வார்னர் ஆகியோர் இருக்கும் நிலையில் 6வது இடத்தில் தற்போது கோலி உள்ளார்.

கடைசியாக ஜனவரி 17ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் விளையாடினார் கோலி. அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த போட்டியில் பெரிதாக ஸ்கோர் குவிக்கவில்லை என்றாலும் இரண்டு வரலாற்று சாதனைகளை புரிந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point