HBD Vinod Kambli: ‘பள்ளி கால கிரிக்கெட்டில் வினோத் காம்ப்ளியும் சச்சினும்..’-வினோத் காம்ப்ளி பிறந்த நாள் இன்று
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரரான இவர், முதலில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தான் அறிமுகமானார். பாகிஸ்தானுக்கு எதிராக 1991ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அறிமுக வீரராக களமிறங்கினார் வினோத் காம்ப்ளி.
1972ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிறந்த வினோத் காம்ப்ளி தற்போது 50 வயதை நிறைவு செய்கிறார்.
இவர் குறித்து இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் குறித்து அறியாத சில தகவல்களை இந்த சிறப்பு கட்டுரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இந்தியா என்றால் கிரிக்கெட் விளையாட்டு பலருக்கும் சற்றென்று நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு நாம் கிரிக்கெட்டை நேசித்து வருகிறோம். பல தலைச்சிறந்த வீரர்களையும் நமது பாரதம் உலக கிரிக்கெட்டுக்கு வழங்கி இருக்கிறது.
பல கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படுவதே மிகப் பெரிய சாதனையாகவே நாம் பார்க்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற சவால்கள் மறுபக்கம் இருக்கிறது. பல வீரர்கள் சரியான திறமை இருந்தும் வாய்ப்பும், சூழலும் அவர்களின் பெயரை வரலாற்றில் பதிய வைக்காமல் செய்துவிடும்.
சரி வினோத் காம்ப்ளி கதைக்கு வருவோம். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரரான இவர், முதலில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தான் அறிமுகமானார். பாகிஸ்தானுக்கு எதிராக 1991ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அறிமுக வீரராக களமிறங்கினார் வினோத் காம்ப்ளி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதியில் அறிமுகமானார்.
எளிமையான குடும்பப் பின்னணி
வினோத் காம்ப்ளி எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது குடும்பம் மும்பையின் புறநகரான கஞ்சுமார்க் பகுதியில் வசித்து வந்தது. இவரது தந்தை கணபத் மெக்கானிக் வேலை பார்த்து வந்தவர். இவரது தந்தை தான் வினோத் காம்ப்ளிக்கு பந்துவீசும் திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தியவர்.
பள்ளி கால கிரிக்கெட் ஒன்றில் வினோத் காம்ப்ளியும் சச்சின் டென்டுல்கரும் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுத்தது உலகம் முழுவதும் ஹெட்லைனானது வரலாறு.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தச் சாதனையை உலகின் எந்தப் பகுதியில் யாரும் முறியடிக்காமல் இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டென்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சமயத்தில் காம்ப்ளி, 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
ரஞ்சி கோப்பையில் காம்ப்ளி விளையாடியபோது சச்சின் இந்திய கிரிக்கெட்டில் தனது பயணத்தை சிறப்பாக தொடங்கிவிட்டார். பின்னர், காம்ப்ளியும் தனது திறமையாலும் முயற்சியாலும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராகவும் இரட்டை சதம் விளாசினார் காம்ப்ளி. பின்னர் அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 227 ரன்களை அடித்து நொறுக்கினார்.
தொடர்ச்சியாக இரட்டை சதங்களை விளாசிய காம்ப்ளி, இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் சதம் பதிவு செய்தார்.
14 இன்னிங்ஸ்களில் காம்ப்ளி 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இன்று அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் வினோத் காம்ப்ளி.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரர் சட்கிளிஃப் 12 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.
டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய வீரர் காம்ப்ளிதான்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்தார் வினோத் காம்ப்ளி. அவர் தனது பிறந்த நாளில் 1993ஆம் ஆண்டில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியபோது சதத்தை பதிவு செய்தார். பிறந்த நாளில் சதம் பதிவு செய்த வீரர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் ஜாம்பவான் சச்சினும், நியூசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லரும் இந்த அரிய சாதனையை நிகழ்த்தினர்.
1996ஆம் ஆண்டு 50 ஓவர் வில்ஸ் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது. அப்போது கண்ணீர் விட்டு அழுதார் காம்ப்ளி.
17 டெஸ்ட் ஆட்டங்களிலும், 104 ஒரு நாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ள வினோத் காம்ப்ளி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் மிகையல்ல.
வினோத் காம்ப்ளி ஆன்ட்ரியா ஹிவிட் என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு ஜீசஸ் கிறிஸ்டியானோ என்ற மகன் உள்ளார்.
டாபிக்ஸ்