தமிழ் செய்திகள்  /  Cricket  /  Vetran Indian Batsman Paul Umrigar Birthday Today

HBD Paul Umrigar: இந்தியாவுக்காக முதல் இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன்! அணியின் டாப் ஸ்கோரர் உம்ரிகர் பிறந்தநாள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 28, 2024 07:10 AM IST

இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஓய்வு பெற்ற காலகட்டத்தில் அதிக ரன்கள், அதிக சதம், அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பேட்ஸ்மேனாகவும் இருந்தவர் பால் உம்ரிகர்

இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் பால் உம்ரிகர்
இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் பால் உம்ரிகர்

ட்ரெண்டிங் செய்திகள்

சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், மித வேகம் மற்றும் ஸ்பின் பவுலிங் செய்யக்கூடிய வீரராக இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 1948 முதல் 1962 வரை என 14 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

ஆறு அடி உயரம் கொண்டவராக இருந்து வந்த உம்ரிகர், எந்தவொரு பவுலரையும் எளிதாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனாக இருந்து வந்தார்.

வெஸ்ட் இண்டீஸில் வைத்து சதம், 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது உம்ரிகரின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக உள்ளது.

முதல் இரட்டை சதம்

இந்தியாவுக்காக முதல் இரட்டை சதம் அடித்த பேட்ஸ்மேன் உம்ரிகர் தான். ஹைதராபாத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இதை செய்துள்ளார். இவர் ஓய்வு பெறும் காலத்தில் 12 சதங்கள் அடித்திருந்தார். இதன் மூலம் அதிக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

அதேபோல் 1962 காலத்தில் அவர் ஓய்வு பெற்ற போது 59 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருந்த உம்ரிகர், இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரராக இருந்துள்ளார். அத்துடன் 3,631 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 1959–60, 1960–61, 1962–63 என தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 

கேப்டன்சி விலகல்

1955 முதல் 1958 காலகட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார் உம்ரிகர். இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் வெற்றி பெற்றார். இதன் பின்னர் குலாம் அகமது கேப்டனாக மாற்றி அமைக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இரண்டு தோல்விகளுக்கு பிறகு சென்னையில் (மெட்ராஸில்) நடைபெற்ற போட்டியில் கேப்டனாக உம்ரிகர் அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் கூடுதல் பேட்ஸ்மேனாக மனோகர் ஹர்திகரை தேர்வு செய்ய உம்ரிகர் நினைத்தபோது, ஸ்பின்னரான ஜேசு பட்டேலை தேர்வு செய்யுமாறு பிசிசிஐ தலைவர் ரதிபாய் பட்டேல் அறிவுறுத்தினார். இதை ஏற்க மறுத்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார் உம்ரிகர்

பிசிசிஐ தேர்வு குழு தலைவர்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணி மேலாளர், தேசிய தேர்வுக் குழுவின் தலைவர், பிசிசிஐ நிர்வாக செயலாளர், வான்கடே மைதானத்தின் பிட்ச் கண்காணிப்பாளர் என கிரிக்கெட் விளையாட்டை சுற்றி பல்வேறு பதவிகளை வகித்தார்.

பத்மஸ்ரீ, சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வென்றிருக்கும் உம்ரிகர், நிணநீர் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். இவருக்கு கெளரவம் அளிக்கும் விதமாக பிசிசிஐ பால் உம்ரிகர் விருதை வழங்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point