HBD Usman Khawaja: பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட முதல் ஆஸி., வீரர் கவாஜா பிறந்த நாள் இன்று
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Usman Khawaja: பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட முதல் ஆஸி., வீரர் கவாஜா பிறந்த நாள் இன்று

HBD Usman Khawaja: பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட முதல் ஆஸி., வீரர் கவாஜா பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil
Dec 18, 2023 06:10 AM IST

உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தாரிக் கவாஜா மற்றும் ஃபோசியா தாரிக் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா
ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா

இங்கிலாந்தில் கவுண்டி துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடிய இவர், இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பாக்கித்தான் சூப்பர் லீக் ஆகிய இரண்டிலும் சிறிது காலம் விளையாடியுள்ளார். 2021-2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் கவாஜா அங்கமாக இருந்தார். மேலும், 2021-2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 1,621 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆவார்.

உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தாரிக் கவாஜா மற்றும் ஃபோசியா தாரிக் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸுக்கு குடிபெயர்ந்தது. 2010-11 ஆஷஸ் தொடரில் அறிமுகமானபோது பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் வீரர் ஆனார்.

அவர் ஒரு தகுதிவாய்ந்த விமானி ஆவார், அவர் டெஸ்ட் அறிமுகத்திற்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விமானப் போக்குவரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். டிரைவிங் லைசென்சுக்கு முன்பே அடிப்படை பைலட் லைசென்ஸ் பெற்றார். வெஸ்ட்ஃபீல்ட்ஸ் விளையாட்டு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

உஸ்மான் கவாஜா 14 டிசம்பர் 2016 அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். பின்னர் ஏப்ரல் 6, 2018 அன்று ரேச்சலை மணந்தார். ரேச்சல் கவாஜா திருமணத்திற்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறினார். கவாஜா ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் இரட்டை குடியுரிமையைக் கொண்டவர் ஆவார்.

இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கவாஜா, 2005 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அண்டர் 19 சாம்பியன்ஷிப்பின் வீரர் விருதைப் பெற்றார், மேலும் இலங்கையில் நடந்த 2006 அண்டர் 19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடினார்.

இவர் 2008 இல் நியூ சவுத் வேல்ஸ் புளூஸ் அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டில், அவர் என்.எஸ்.டபிள்யூ இரண்டாவது லெவன் அணிக்காக தொடர்ச்சியான இரட்டை சதங்களை பதிவு செய்தார் - இது இதற்கு முன்பு ஒரு என்.எஸ்.டபிள்யூ வீரரால் அடையப்படாத சாதனையாகும். 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா கருப்பு பேண்ட்டை இடது கையில் கட்டி வந்தது ஏன் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமும் நடந்தது. அவர் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதை செய்ததாக கூறப்படுகிறது.

‘அனைவரின் வாழ்க்கையும் முக்கியம்’, ‘சுதந்திரம் ஒரு மனித உரிமை’ என்ற இந்த இரண்டு வாக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதிய ஷூவை அணிந்து விளையாட முடிவு செய்திருந்தார். எனினும், ஐசிசியின் விதிமுறைகள் இதை அனுமதிக்கவில்லை.

இவரது முயற்சிக்கு ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ்,  ஆஸி., துணை கேப்டன் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆதரவு கருத்து தெரிவித்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.