T20 World Cup: டி20 உலகக் கோப்பை சுவாரஸ்யம்..39 ரன்னில் ஆல் அவுட்.. நெதர்லாந்து சாதனையை சமன் செய்த உகாண்டா!
T20 World Cup: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற நெதர்லாந்தின் சாதனையை உகாண்டா சமன் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
174 ரன்கள் இலக்கு
இந்நிலையில் இந்த தொடரில் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (ஜூன் 09) நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 42 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். ரசல் 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். உகாண்டா தரப்பில் பிரையன் மசாபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி களமிறங்கியது.
39 ரன்களில் ஆல் அவுட்
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது உகாண்டா. இறுதியில் உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. உகாண்டா தரப்பில் ஜுமா மியாகி 13 ரன் எடுத்து இழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நெதர்லாந்து சாதனையை சமன் செய்த உகாண்டா
உகாண்டா அணி இந்த ஆட்டத்தில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற நெதர்லாந்தின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க்கில் இன்று (ஜூன் 09) நடைபெற இருக்கிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், டி20 உலகக் கோப்பை தொடரை பாசிடிவாக தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்