Uganda Cricket: வரலாறு படைத்த உகாண்டா! முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி - வெளியேறிய ஜிம்பாப்வே
2023 உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ததை தொடர்ந்து தற்போது 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது ஜிம்பாப்வே அணி.

முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருக்கும் உகாண்டா அணி (@CricketUganda)
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்றுள்ளது உகாண்டா அணி. இதன் மூலம் 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு 20வது அணியாக தகுதி பெற்றுள்ளது. அத்துடன் முதல் முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது.
ஐசிசி ஆப்பரிக்கா பகுதிக்கான தகுதி சுற்றில் உகாண்டா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் நமிபியா அணியுடன், இரண்டாவது இடத்தில் இருக்கும் உகாண்டா அணி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
ஆப்பரிக்கா பகுதி தகுதி சுற்று போட்டிகளில் நமிபியா, உகாண்டா, ஜிம்பாப்வே, கென்யா, நைஜிரியா, டான்சானியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்றன.