AFG vs UAE: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஷாக் கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்
2023ஆம் ஆண்டின் இறுதியை வெற்றிகரமாக முடித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஷாக் கொடுத்திருப்பதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் சமன் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைதத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் பவுலர்களில் குவாயிஸ் அகமது, அஸ்மதுல்லா உமல்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 19.5 ஓவரில் 155 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில்
ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது நபி அதிரடி காட்டி 47 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஓபனர்கள் ஹஸ்ரதுல்லா ஜாஸாய் 36, ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாமல் சொதப்பிய நிலையில், ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவியது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் அலி நாசர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜவாதுல்லா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலை ஆகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
2023ஆம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். சர்வதேச அளவில் சவால் மிக்க அணியாக உருமாறி வரும் ஆப்கானிஸ்தானுக்கு இந்த தோல்வி அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற டி20 போட்டியில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரகம். இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் மீண்டும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சாதித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்