Vijay Hazare Trophy: உதட்டில் வெட்டு காயம்.. பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு விளையாடிய தமிழக வீரர்!
குளியலறையில் விழுந்த பிறகு உதட்டில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் விளையாடினார் பாபா இந்திரஜித்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள SCA ஸ்டேடியத்தில் ஹரியானாவுக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி அரையிறுதியின் போது, தமிழக வீரர் பாபா இந்திரஜித் உதட்டில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தால் பிளாஸ்திரி அணிந்து பேட் செய்ய களமிறங்கினார். அந்த ஆட்டத்தில் துணிச்சலுடன் விளையாடிய அவர், அரை சதம் விளாசினார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. முதலாவது அரையிறுதியில் தமிழக அணி தோல்வி அடைந்துவிட்டது. எனினும், ஹரியானாவுடன் நம்பிக்கையுடன் போராடியது.
முதலில் விளையாடிய ஹரியானா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்தது. 294 என்ற இலக்கை துரத்திய தமிழக அணி 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து திணறியதால் நிலைமை மோசமடைந்தது. இந்திரஜித் உதட்டில் பிளாஸ்திரியுடன் களத்தில் நுழைந்தார், மேலும் 16வது ஓவரில் அவருக்கு மருத்துவ உதவியும் தேவைப்பட்டது.
காயம் அடைந்த போதிலும் துணிச்சலுடன் களமிறங்கிய இந்திரஜித் 71 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், அவரது முயற்சிகள் தமிழ்நாட்டை வெற்றிக்கு கொண்டு செல்ல போதுமானதாக இல்லை, இறுதியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது தமிழ்நாடு. 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த தமிழ்நாடு அணி 230 ரன்களில் ஆட்டமிழந்தது.
முன்னதாக, மும்பைக்கு எதிரான தமிழ்நாட்டின் காலிறுதி வெற்றியில், ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்ததில், இந்திரஜித் முக்கிய பங்கு வகித்தார். போட்டி முழுவதும், அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட ஏழு இன்னிங்ஸ்களில் இருந்து 270 ரன்களுக்கு மேல் குவித்து அணியின் முன்னணி ரன்களை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியைத் தொடர்ந்து, இந்திரஜித் தனது சமூக ஊடக கணக்கில் குளியலறையில் விழுந்ததாகவும், அரையிறுதியில் தனது இன்னிங்ஸைத் தொடர்ந்து உதட்டில் தையல் போட வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.
“உங்கள் அக்கறைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நான் குளியலறையில் தவறி விழுந்தேன். மேல் உதடு மற்றும் உதட்டின் உள்பகுதியில் ஆழமான வெட்டுக் காயத்துடன் ரத்தம் கொட்டியது. சற்று கலங்கி போய்விட்டேன். எப்படியோ பேட்டிங் செய்ய முடிந்தது, ஆனால் அணியின் வெற்றிக்கு சேஸிங் செய்ய முடியாமல் போனது. மருத்துவமனைக்குச் சென்று தையல் போட்டேன். விரைவில் திரும்புவேன். வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி” என்று இந்திரஜித் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
டாபிக்ஸ்