தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  T20 World Cup 2024: அசத்தல் பந்துவீச்சால் வீழ்ந்தது வங்கதேசம்.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா!

T20 World Cup 2024: அசத்தல் பந்துவீச்சால் வீழ்ந்தது வங்கதேசம்.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா!

Karthikeyan S HT Tamil
Jun 11, 2024 08:05 AM IST

T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை தொடரின் 21-வது லீக் ஆட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.

T20 World Cup 2024: வீழ்ந்தது வங்கதேசம்.. கடைசி ஓவரில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா!
T20 World Cup 2024: வீழ்ந்தது வங்கதேசம்.. கடைசி ஓவரில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா! (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா மோதல்

நியூயார்க்கில் நடைபெற்ற 21 ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டிகாக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.

தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

ஹெண்ட்ரிக்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டிகாக் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் எய்டன் மார்க்கரம் 4, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 23 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.

கிளாசன், டேவிட் மில்லர் சிறப்பான பேட்டிங்

அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தென்னாப்பிரிக்கா மீண்டு வர ஒரே காரணம் ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் நங்கூரத்தை இறக்கி ஐந்தாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். 17.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளாசன் ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உதவியுடன் 46 ரன்களை விளாசினார். மில்லர் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கோட்டை விட்ட வங்கதேசம்

இதனைத் தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தன்சித் ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழக்க, லிட்டன் தாஸ் 9 ரன்களிலும், சாகிப் அல் ஹாசன் 3 ரன்னிலும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தெளஹித் ஹிருதய் மற்றும் மஹ்முதுல்லா இணைந்து 44 ரன்கள் சேர்த்தனர். இதில், தெளஹித் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

த்ரில் வெற்றி

இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்க தேசம் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேசத்திற்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 விக்கெட்டுகள் வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தென்ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்த சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜூக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024