IND vs SA Final: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..! ரிசர்வ் நாள், சூப்பர் ஓவர் விதிமுறை என்ன? முழு விவரம்
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி மழையால் தடைப்பட்டால் ரிசர்வ் நாள் அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் நாள் மற்றும் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் விதிமுறை என்ன என்பதன் முழு விவரம் பற்றி பார்க்கலாம்
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே பார்போடாஸில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.
2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு பின்னர் 5 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற போதிலும் வெற்றி பெறாமல் இருந்து வருகிறது இந்தியா. இதையடுத்து 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை என்பது கனவாகவே இருந்து வரும் நிலையில், அதை நனைவாக்கி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் தென் ஆப்பரிக்கா, முதல் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளது.
சம பலம் பொருந்திய அணிகள்
இறுதிப்போட்டியில் களமிறங்கும் இந்தியா, தென் ஆப்பரிக்கா ஆகிய இரு அணிகளும் சம பலம் பொருந்தியதாக இருக்கின்றன. இந்தியாவுக்கு பேட்டிங்கில் ரோகித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் என்றால் தென் ஆப்பரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம், குவனைடன் டி காக் ஆகியோர் உள்ளார்கள்.
அதேபோல் அதிரடிக்கு இந்தியாவில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும், தென் ஆப்பரிக்காவுக்கு ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோரும் உள்ளார்கள்.
பவுலிங்கிலும் வேகப்பந்து வீச்சுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஸ்பின் பவுலிங்குக்கு குல்தீப் யாதவ் என இருக்க, தென் ஆப்பரிக்கா அணியில் ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், ஸ்பினுக்கு கேசவ் மகாராஜ் ஆகியோர் இருக்கிறார்கள்.
எனவே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பக்கா சமநிலை கொண்ட அணிகளாக இரு அணிகளும் உள்ளதால் போட்டியானது சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்
ரிசர்வ் நாள் விதிமுறை
போட்டி நடைபெறும் பார்போடாஸில் இரவில் மழை பெய்து வருகிறது. ஆனால் போட்டியான காலை நேரத்தில் நடைபெற இருப்பதால் பகலில் மழைக்கு வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை பெய்தால் ரிசர்வ் நாள் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 190 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து ரிசர்வ் நாளிலும் மழை பெய்து போட்டி நடக்காமல் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், இறுதிப்போட்டியை முழுமையாக நடத்த குறைந்தது 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும். அதில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியும் 10 ஓவர்கள் பேட் செய்ய வேண்டும்.
திட்டமிட்டபடி போட்டி தொடங்கி, மழை குறுக்கீடு காரணமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ரிசர்வ் நாளில் இந்த போட்டி எந்த இடத்தில் நிறுத்தப்பட்டதோ அதிலிருந்து தொடங்கும்.
சூப்பர் ஓவர் விதிமுறை
இந்த போட்டியானது சமனில் முடிந்தால் வெற்றியாளர் சூப்பர் ஓவர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். சூப்பர் ஓவரும் சமன் ஆகும் பட்சத்தில் மீண்டும் சூப்பர் ஓவர் வீசப்பட்டு, வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை நடைபெறும். போட்டி முடிவுற்ற அடுத்த 5 நிமிடத்தில் சூப்பர் ஓவர் தொடங்கிவிடும். அனுமதிக்கப்பட்ட கூடுதல் நேரத்தை பயன்படுத்தும்போது அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்