GT vs SRH Live Score: குஜராத்தின் கட்டுக்கோப்பான பவுலிங்..! தடவி தடவி ரன்களை தேத்தியிருக்கும் சன் ரைசர்ஸ்-srh sets 163 runs target for gt after their good bowling effort - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Gt Vs Srh Live Score: குஜராத்தின் கட்டுக்கோப்பான பவுலிங்..! தடவி தடவி ரன்களை தேத்தியிருக்கும் சன் ரைசர்ஸ்

GT vs SRH Live Score: குஜராத்தின் கட்டுக்கோப்பான பவுலிங்..! தடவி தடவி ரன்களை தேத்தியிருக்கும் சன் ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 31, 2024 07:36 PM IST

குஜராத் பவுலர்களின் கட்டுக்கோப்பான பவுலிங்கில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமலும், பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாமலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் அபிஷேக் ஷர்மா
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் அபிஷேக் ஷர்மா (AFP)

அத்துடன் குஜராத் அணியில் விளையாடும் அயல்நாட்டு வீரர்கள் நான்கு பேரில், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், நூர் அகமது ஆகிய மூவரும் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்களாக உள்ளனர்.

சன் ரைசர்ஸ் பேட்டிங்

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்துள்ளது.

அதிகபட்சமாக அப்துல் சமாத் 29, அபிஷேக் ஷர்மா 29, ஹென்ரிச் கிளாசன் 24, ஷபாஸ் அகமது 22 ரன்கள் எடுத்துள்ளனர். சன் ரைசர்ஸ் அணியில் யாருமே அரைசதம் அடிக்காத நிலையில் இந்த ஸ்கோரை எடுத்துள்ளது.

கட்டுக்கோப்பாக பந்து வீசிய குஜராத் பவுலர்களில் அறிமுக வீரர் தர்ஷன் நல்கண்டே தவிர மற்ற அனைவரும் விக்கெட்டுகள் எடுத்தனர். மோகித் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் கடைசி ஓவரை அற்புதமாக பந்து வீசிய அவர் 3 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அஸ்மதுல்லா உமர்சாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அகமது, ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பார்ட்னர்ஷிப் அமையாமல் தவித்த சன் ரைசர்ஸ்

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள சிறிய பங்களிப்பை வெளிப்படுத்துவதும், அவுட்டாகி வெளியேறுவதுமாக இருந்தனர். பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் அமையவில்லை. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ட்ராவிஸ் ஹெட் 19, மயங்க் அகர்வால் 16 ரன்கள் அடித்தனர்.

இவர்களை தொடர்ந்து கடந்த போட்டியில் அதிரடியால் மிரட்டிய அபிஷேக் ஷர்மா இந்த போட்டியிலும் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என விளாசினார். ஆனாலும் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.

ஐடன் மார்க்ரம் விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக நிதானமாக பேட் செய்தபோதிலும் 17 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

கிளாசன் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் போல்டானார்.

அப்துல் ஷமாத் பினிஷ்

கடைசி கட்டத்தில் கொஞ்சம் அதிரடியை வெளிப்படுத்திய ஷமாத் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். 14 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன்அவுட்டானார். இவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஷபாஸ் அகமது கடைசி நேரத்தில் 45 ரன்களை சேர்த்தார். ஷபாஸ் அகமது 22 ரன்கள் அடித்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவுட்டானார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.