SRH vs MI Result: ஆடு புலி ஆட்டத்தில் வென்ற சன் ரைசர்ஸ்! மரணத்தை பயத்தை காட்டிய மும்பை
இந்த சீசனில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஆடு புலி ஆட்டம் போல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அபாரமாக வென்றுள்ளது. தோல்வி அடைந்தாலும் வெற்றிக்கு அருகே சென்று வரலாற்று சாதனை புரிந்த சன் ரைசர்ஸ் அணிக்கு மரண பயத்தை காட்டியது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் 2024 தொடரின் 8வது போட்டி சன் ரைசர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லூக் உட்டுக்கு பதிலாக குவேனா மபகா சேர்க்கப்பட்டார். இவர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார்.
அதே போல் சன் ரைசர்ஸ் அணியில் இடது கை வேகப்பந்து வேகப்பந்து வீச்சாளரான தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட், மார்கோ ஜான்செனுக்கு பதிலாக ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
சன் ரைசர்ஸ் வரலாற்று சாதனை
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் ஒரு அணியால அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதிலும் எந்தவொரு பேட்ஸ்மேனும் சதமடிக்காத நிலையில், இந்த ஸ்கோர் எடுக்கப்பட்டுள்ளது.
சன் ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் அபிஷேக் ஷர்மா 63, ட்ராவிஸ் ஹெட் 62 ரன்கள் எடுத்துள்ளனர். அத்துடன் அந்த அணி பவுண்டரி, சிக்ஸர்கள் மூலம் மட்டுமே 184 ரன்கள் அடித்தது.
மும்பை இந்தியன்ஸ் பதிலடி
சன் ரைசர்ஸ் அதிரடிக்கு சற்றும் குறைவில்லாத விதமாக மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கினர். களத்தில் இறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவில் பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் 20 ஓவரில் விக்கெட் 5 இழப்புக்கு 246 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு எட்டும் தூரத்தில் வந்து தோல்வியை தழுவியது. சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
தங்களது அணி பவுலர்களை வெளுத்து வாங்கியதற்கு பதிலடி தரும் விதமாக சன் ரைசர்ஸ் பவுலர்களின் பந்து வீச்சை மிரட்டல் அடி அடித்துள்ளனர் மும்பை இந்தியன்ஸ்.
பேட்ஸ்மேன்களின் கனவு ஆட்டமாகவும், பவுலர்கள் கனவில் கூட நினைத்து பார்க்ககூடாத ஆட்டமாகவும் இந்த போட்டி அமைந்துள்ளது.
மும்பை பேட்ஸ்மேன் அதிரடி
மிகப் பெரிய இலக்கை விரட்டியதால் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியாக பேட் செய்தனர். ஓபனர்கள் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் இணைந்து 3.2 ஓவரில் 56 ரன்கள் சேர்த்தனர். ரோகித் ஷர்மா 12 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 26 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி என 34 ரன்கள் அடித்தார்.
இவர்களை தொடர்ந்து பேட் செய்ய வந்த நமன் திர் 14 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். இவர் 2 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்தார்.
மும்பை இந்தியன்ஸ் டாப் ஸ்கோரராக திலக் வர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளை பறக்க விட்டு எடுத்தார். இரண்டாவது டாப் ஸ்கோரராக டிம் டேவிட் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இவர் 3 சிக்ஸர்,ஸ 2 பவுண்டரிகள் அடித்தார்.
பாண்ட்யா ஏமாற்றம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் பாண்ட்யா 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
மொத்தம் 500 ப்ளஸ் ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸில் 20 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அதன்படி 168 ரன்கள் பவுண்டரிகள் மூலம் கிடைத்தது.
மொத்தமாக இந்த போட்டியில் 523 ரன்கள் அடிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் 500+ ஸ்கோர் ஒரே போட்டியில் அடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.