IND vs SA: மழையால் ஓவர்கள் குறைப்பு-தென்னாப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் இலக்கு
IND vs SA: 19.3 ஓவர்களில் இந்தியா 180/7 எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் 19.3 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றதும், ஓவர்கள் 15-ஆக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசி அசத்தினார். அத்துடன், T20Iகளில் 2000 ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற கோலியின் சாதனையை முறியடித்தார்.
தென்னாப்பிரிக்காவில் டி20 போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆவார். டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் சூர்யகுமார் யாதவ். வெறும் 1164 பந்துகளில் 2000 ரன்களை விளாசியிருக்கிறார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 கிரிக்கெட் Gqeberha நகரில் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து முதலில் இந்தியா பேட்டிங் செய்தது.
முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் ரத்தானது. இந்நிலையில், இரண்டாவது ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டது.
மார்கோ ஜான்சன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரை டக் செய்து அனுப்பிய பிறகு, SKY 28 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். 2 ஓவர்களில் 6/2 என்ற நிலையில் இந்தியா திணறிய நிலையில், சூர்யாவும் திலக் வர்மாவும் களமிறங்கி அதிரடி காண்பித்தனர்.
எனினும் திலக் வர்மா 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெரால்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், 56 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆனார். பின்னர், களம் புகுந்த ஜிதேஷ் சர்மா 1 ரன்னில் நடையைக் கட்டினார். மறுபக்கம் ரிங்கு சிங் மிடில் ஆர்டரில் நிதானமாக செயல்பட்டு, அரைசதம் பதிவு செய்தார். 30 பந்துகளில் ரிங்கு அரை சதம் பதிவு செய்தார்.
பின்னர் வந்த ஜடேஜா 19 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். இதைத் தொட்ந்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டானார். 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதையடுத்து ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டாபிக்ஸ்