Ind vs Zim 3rd T20: கேப்டனாக முதல் அரைசதம்..! கில் அதிரடி, ருதுராஜ் சரவெடி - இந்தியா ரன் குவிப்பு
கேப்டனாக முதல் அரைசதம் விளாசியிருக்கும் கில் அதிரடியாக பேட் செய்து ரன் குவித்தார். அவருடன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து சரவெடி ஆடத்தை வெளிப்படுத்த இந்தியா ரன் குவிப்பில் ஈடுபட்டு சவாலான இலக்கை ஜிம்ப்பாப்வேக்கு எதிராக நிர்ணயித்துள்ளது.

கேப்டனாக முதல் அரைசதம் அடித்து கில் அதிரடி (AFP)
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது 1-1 என்ற கணக்கில் தொடர் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் ரியான் பிராக், சாய் சுதர்சன், முகேஷ் குமார், துருவ் ஜூரல் ஆகியோருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, கலீல் அகமது, சஞ்சு சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை 2024 அணியில் இடம்பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த தொடரில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.